புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் மோடி அளித்த பதில் போதுமானதாக இல்லை என தெரிவித்த கரப்பான் பூச்சி கட்சி, இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் சமீபகாலமாக நடந்து வரும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி போராட்டம் நடத்திய போது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை விரட்டியடித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தொடர்ந்து 34வது நாளாக சிஜேபியின் போராட்டம் ஜந்தர் மந்தரில் நேற்றும் தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக நேற்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், வினாத்தாள் கசிவு குறித்து விரைவு நீதிமன்றங்கள் அமைத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதை ஏற்க சிஜேபி கட்சி மறுத்து விட்டது. அதன் நிறுவனர் அபிஜித் திப்கே எக்ஸ் தளத்தில் அளித்த பதிலில், ‘‘தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’’ என ஒற்றை வரியில் முடித்து விட்டார்.
மேலும், பிரச்னையை பேசித் தீர்க்க சிஜேபி பிரதிநிதிகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கடந்த 24 மணி நேரத்தில் 4 முறை அழைப்பு விடுத்தும் சிஜேபி கட்சியினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இது குறித்து சிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா போராட்ட களத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றரை மாத போராட்டங்களுக்கு பிறகு பிரதமர் மோடி இறுதியாக கவனித்திருப்பது நல்ல விஷயம். ஒருவேளை அவரது வெளிநாட்டு பயணங்கள் முடிந்து இந்தியா திரும்பியிருப்பதால் கவனித்திருக்கலாம்.
அதுவும் நல்ல விஷயம் தான். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் தண்டனை எடுப்பது என்பது காயத்திற்கு மருந்து பூசுவது போன்றது. ஆனால் காயமே ஏற்படாமல் தடுப்பதுதான் எங்கள் போராட்டத்தின் உண்மையான நோக்கம். ஏன் வினாத்தாள் கசிகின்றன என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும். அமைப்பை நிர்வகிப்பவர்களிடம் பொறுப்புகூறலோ அல்லது திறமையோ இல்லாததால்தான் இந்த காயங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. எனவே இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் போதுமானவை அல்ல.
மேலும், மக்கள் கோபமாக இருப்பதால் பேச்சுவார்த்தை நடத்த ஜந்தர் மந்தருக்கு எங்களை அழைக்க வேண்டாம் என அரசு தரப்பில் கூறிவிட்டனர். பொதுவான இடத்தில் நடத்துங்கள் என நாங்கள் கூறுகிறோம். ஆனால் அமைச்சரோ அவரது வீட்டில் அல்லது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார். நாங்கள் அமைச்சர் நட்டாவின் வீட்டிற்கு செல்லப் போவதில்லை. நீங்கள் ஒரு கூட்டத்தை கூட்டினால், எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் அல்லது அதற்கான காலக்கெடுவை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று நாடு தழுவிய அளவில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இளைஞர்கள் போராட்டம் டெல்லியை தாண்டி பல மாநிலங்களில் பரவியிருக்கும் நிலையில், இன்றைய நாடு தழுவிய போராட்டம், சிஜேபியின் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் பணிவான வேண்டுகோள்
ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில் அரசு குறைந்தது 4 முறையாவது பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன. இது அரசு சார்பில் விடுக்கப்படும் பணிவான வேண்டுகோள். பேச்சுவார்த்தை அமைச்சர் நட்டாவின் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ நடத்தலாம். அதை மாணவர்களே தீர்மானிக்கலாம். விவாதமின்றி தீர்வு காண முடியாது, தீர்வு காணப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையைத் திட்டமிட முடியாது’’ என்றார்.
* 2வது நாளாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்
ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தையொட்டி, நேற்றும் 2வது நாளாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மத்திய டெல்லியில் போக்குவரத்து முடங்கியது. மெட்ரோவில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டனர். இதே போல கன்னாட்பிளேஸ் மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு கருதி மாலை 6.30 மணிக்கு அனைத்து கடைகளும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* இணைய சேவை நிறுத்தம்
சிஜேபி போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றியுள்ள 1.5 கிமீ சுற்றளவில் நேற்று நள்ளிரவு வரை மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. பொது பாதுகாப்பு மற்றும் பொது அவசர நிலையை தவிர்த்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொலைதொடர்பு சட்டம் 2023 மற்றும் தொலைதொடர்பு சேவைகளை தற்காலிகமாக நிறுத்துதல் விதிகள் 2024ன் கீழ் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதியிலிருந்து இதுபோன்ற 5 உத்தரவுகளை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
* மக்களின் கோபம் மோடியை நோக்கி திரும்பியிருக்கிறது
சிஜேபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், ‘‘அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம். இங்கே ஏராளமான இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உறுதியுடனும் கூடியுள்ளனர். அனைவரும் அவரது ராஜினாமாவை வலியுறுத்துகின்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இந்த பிரச்னை தர்மேந்திர பிரதான் என்ற ஒருவருடன் மட்டும் நின்று விடாது.
இப்போது மக்களின் கோபம் பிரதமரை நோக்கி திரும்பியுள்ளது. இங்கே எழுப்பப்படும் முழக்கங்களைக் கவனித்தால், மக்கள் சொல்வதைக் கேட்காத பிரதமர் மீதுதான் மக்களின் கோபம் அதிகமாகத் திரும்பியிருப்பதை நீங்கள் காணலாம். மக்கள் இப்போது நேரடியாகப் பிரதமரிடமே கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளதால், அரசாங்கம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
* இரவில் போராட்டத்தை கலைக்க திட்டமா?
ஜந்தர் மந்தரில் நேற்று நள்ளிரவு வரை இணைய சேவை துண்டிப்பு மற்றும் கன்னாட்பிளேசில் மாலை 6.30க்குள் கடைகளை அடைக்க உத்தரவு, ஆம்புலன்ஸ்கள் குவிப்பு ஆகியவற்றின் மூலம் நேற்றிரவு போராட்டத்தை கலைக்க போலீசார் திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் நிலவியது.
* போராட்டக்காரர்களின் பாஸ்போர்ட் ரத்தாகும்
சிஜேபி போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் நபர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படலாம் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
* நள்ளிரவில் வன்முறை கண்ணீர் புகை வீச்சு
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு அதை ஒட்டிய சன்சத் மார்க் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 5,000 பேர் கூடியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை சுமார் 100 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் அவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கூரான ஆயுதத்தை வைத்திருந்ததாக காயமடைந்த தலைமைக் காவலர் பல்ராம் கூறி உள்ளார். ஏசிபி விவேக் பாகத் என்பவரின் மண்டை உடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனவே போராட்ட களத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து விட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் வன்முறை விபரீதமாகாமல் தடுக்க சிஜேபி கட்சி இளைஞர்களே முன்வந்து சாலையில் கிடந்த கற்களை அகற்றி, வன்முறையில் ஈடுபட்டவர்களை அமைதிபடுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்தே நேற்று இணைய சேவை துண்டிக்கப்பட்டு கன்னாட் பிளேசில் மாலை 6.30 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டன.
* தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதி
டெல்லியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களை, தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் எந்த வித விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்க, ெடல்லி போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் வரும் அக்டோபர் 18ம் தேதி வரை மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் வகையில் டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
