பழநி: வழக்குகள் நிலுவையில் இருந்தும் பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான பத்திரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் முருகதாஸ் என்பவர், ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு, சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோருக்கு பதிவு செய்து கொடுத்த பத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பத்திரத்தில் உள்ள விபரங்கள் வருமாறு: பழநி அடிவாரத்தை சேர்ந்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் அதன் அறங்காவலர் எம்.டி.முருகதாஸ் மூலம் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* மார்ச் 27ம் தேதி பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை பத்திரத்தில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்த சேதுபதி ஆகியோர் இணைந்து வாங்குபவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
* விற்பனை செய்யப்படும் சொத்து முதலில் திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் ஆகியோருக்கு சொந்தமானதாகவும், அவர் உருவாக்கிய தண்டபாணி சுவாமி மடம் என்ற தனியார் அறக்கட்டளையின் சொத்துகளில் இதுவும் ஒரு பகுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த அறக்கட்டளை 1940ம் ஆண்டு நடைபெற்ற சிவில் வழக்கில் தனியார் அறக்கட்டளையாக அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் 1941ல் நடந்த மேல் மறு முறையீட்டில் அது உறுதி செய்யப்பட்டதாகவும் விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பழநியை சேர்ந்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக கூறப்படும் இந்நிலம், அறக்கட்டளை தீர்மானத்தின் அடிப்படையில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணத்தில் இடம் பெற்றுள்ள விபரங்களின்படி, முந்தைய அறங்காவலர்கள் மறைவுக்கு பிறகு, தற்போதைய விற்பனையாளரின் தந்தையான தண்டபாணி ஐயா உள்ளிட்ட அடுத்தடுத்த அறங்காவலர்கள் அறக்கட்டளையின் சொத்துகளை நிர்வகித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தற்போதைய விற்பனையாளர், அறக்கட்டளையின் சட்டபூர்வ அறங்காவலராக இருந்து அதன் சொத்துகளை நிர்வகித்து வருவதாகவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* அறக்கட்டளையின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட நிலம் போதிய வருமானத்தை ஈட்டவில்லை என்பதால், 2001, நவம்பர் 22ம் தேதியிட்ட உயில் மற்றும் பழநி இணை சார்பதிவாளர் அலுவலகம், புத்தகம்- 3, ஆவண எண் 136/ 2001 ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த மார்ச் 18ம் தேதி இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின்படி நிலத்தை விற்று கிடைக்கும் தொகையை மீண்டும் முதலீடு செய்து, அறக்கட்டளையின் தொண்டு நோக்கங்களுக்கு வருமானம் உருவாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
* பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அதிகபட்ச ஏலத்தொகையை வழங்கிய நபர் வாங்குபவராக தேர்வு செய்யப்பட்டதாகவும் விற்பனை பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்த சொத்து தொடர்பாக முறையே 2016 மற்றும் 2018ல் வழக்குகள் தொடரப்பட்டிருந்ததாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் 2025, செப்டம்பர் 2ம் தேதி பழநி முதன்மை சார்பு நீதிமன்றம் வழங்கிய ஒரே தீர்ப்பின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அந்த தீர்ப்பில் சம்பந்தப்பட்ட சொத்து தனியார் அறக்கட்டளை சொத்து எனக் கூறப்பட்டதாகவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* 2016ல் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, சொத்து உரிமை அறிவிப்பு மற்றும் உடைமை பெறுதல் தொடர்பாக பழநி சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2025, செப்டம்பர் 2ம் தேதிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விற்பனையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகள் மற்றும் சட்ட பிரச்னைகள் குறித்து முழுமையாக அறிந்த நிலையிலேயே, வாங்குபவர் இந்த சொத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
* இந்த விற்பனை தொகையில் தலா ரூ.50 லட்சம் வீதம் 4 காசோலைகள் மூலம் ரூ.2 கோடி வழங்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர் தொகையை பெற்று கொண்டதை ஒப்பு கொண்டு, அட்டவணை சொத்தை வாங்குபவருக்கு மாற்றி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இப்பத்திர ஆவணங்களின் அடிப்படையில் பிரச்னைக்குரிய நிலத்தை ஏலமிட்டு விற்பனை செய்ததும், சொத்து தொடர்பான வழக்குகளை நன்கு தெரிந்தே சொத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இடம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தும், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* விழுப்புரம் ஆசிரியர் வீட்டுக்கு வைத்த சீல் அகற்றம்
பழநி கோயில் நிலம் விற்பனை தொடர்பாக விழுப்புரம் என்ஜிஜிஓ காலனி காமராஜர் நகர் பகுதியில் வசித்து வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் முருகதாஸ் வீட்டில் கடந்த 18ம் தேதி இரவு சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி, 50க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அவரது வீட்டுக்கு சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் முருகதாசுக்கு சம்மன் அனுப்பி திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல் நிலையம் வரவழைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும், சீலை அகற்றி வீட்டுக்கு செல்லலாம் என்றும், அழைக்கும்போது வருமாறும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று திண்டுக்கல்லில் இருந்து திரும்பிய முருகதாஸ் சிபிசிஐடி போலீசார் வைத்த சீலை அகற்றி வீட்டுக்குள் சென்றார். வழக்கம்போல் ஆசிரியர் பணிக்கும் சென்றார்.
* சார்பதிவாளர் ஆபீசில் உயர்மட்டக்குழு 7 மணி நேரம் விசாரணை
பழநி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய கூடுதல் பதிவு தலைவர் சுதா மல்யா, உதவி பதிவு தலைவர் பூங்கொடி, மாவட்ட பதிவாளர் கண்ணன் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழு பத்திரப்பதிவு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நேற்று காலை பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரணையை துவக்கினர். பத்திரப்பதிவு நாளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியாக அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். ஊழியர்களின் வாக்குமூலங்கள் கேமராவிலும் பதிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து 2 குழுக்களாக 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசாரும் நேற்று சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 7 மணி நேரத்திற்கு மேல் நடந்த ஆய்வு மற்றும் விசாரணையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் விவிஐபிக்கள் மட்டுமின்றி பத்திரப்பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் சிக்குவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், உதவியாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளர் சசிகலாவிடமும் வெகு விரைவில் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
