×

டெல்லி ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற பகுதிகளில் இணைய சேவை துண்டிப்பு

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி மேற்கொண்டு வரும் நிலையில் ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற சுற்றுப் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடிய நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க 163 தடைச் சட்டத்தை தில்லி முழுவதும் காவல்துறையினர் நேற்று மாலை அமலுக்கு கொண்டுவந்தனர். நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் சுற்றுப் பகுதிகள் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களால் டெல்லியில் 5 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ராஜிவ் சௌக், ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செகரட்டரியேட், சேவா தீர்த் நிலையங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை செயல்படாது என டெல்லி மெட்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற சுற்றுப் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான குறுஞ்செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் மொபைல் போன்களுக்கு வந்திருக்கிறது.

நாடாளுமன்றத்துக்கு பேரணி செல்ல முயன்றதால் கரப்பான் கட்சியினர்-காவல் துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீஸ் வைத்திருந்த தடுப்புகளை மீறி பேரணியாக செல்ல கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முயற்சி செய்ததால் அவர்கள் மீது துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தியுள்ளனர். தடுப்புகளை மீறி வருபவர்களை காவல் துறையினர் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

 

Tags : DELHI ,JANDAR ,MANDAR ,EU ,Education Minister ,Dharmendra Pradhan ,Karappanpuchi Janata Party ,Jantar Mander ,Parliament ,
× RELATED இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி...