மதுரை: வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக உருவெடுக்க திட்டமிட்டு இருக்கும் இந்தியாவின் லட்சியத்திற்குப் பங்களிக்குமாறு இளம் தொழில்முனைவோரை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் நடைபெற்ற ‘YiFi தொழில்முனைவோர் உச்சிமாநாடு 2026’-ன் சிறப்பு முழுஅமர்வுக் கூட்டத்தில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், நாட்டின் அடுத்த கட்டப் பொருளாதார வளர்ச்சியானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும், பாரம்பரியப் புவியியல் எல்லைகளைத் தாண்டி விரிவடையவும் தயாராக இருக்கும் தொழில்முனைவோர்களால் தான் பெருமளவில் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய தலைமுறையினர் தங்களுக்கு இருக்கும் தயக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தற்காலத்தில் உங்களுக்கு அனைத்தும் மிக எளிதாக கிடைக்க கூடிய சூழல் இருக்கிறது. தொழில் செய்வதற்கான நாடு இந்தியா. எளிமையாக அணுக கூடிய அரசு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொழில்களை வளர்க்கும் அமைப்பாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை வழிநடத்த, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கற்று, தங்கள் வணிகத்தில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர் மேலாண்மை போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய துறைகளில் AI தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
