×

அமைச்சர் உத்தரவை மீறி அரசு பள்ளியில் முதல்வர் படத்துடன் போட்டோ ஷூட், சினிமா பாடலுடன் ரீல்ஸ்: பல்லடத்தில் தவெகவினர் அட்ராசிட்டி

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் உத்தரவை மீறி அரசு பள்ளியில் முதல்வர் படத்துடன் போட்டோ ஷூட் மற்றும் சினிமா பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், தவெகவினர் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் பதிவிடுவதும், கட்சியின் தலைவர் படத்துடன் போட்டோ ஷூட் நடத்துவதும், மாணவர்களுக்கும் அரசு பணியாளர்களுக்கும் பெரும் இடையூறாக இருப்பதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலகங்களுக்குள் கட்சி சார்ந்த நபர்கள் யாரும் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என தவெக தலைமைக்கழகம் சார்பில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதேபோல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் அறிவுறுத்தியிருந்தார். அதை மீறி தொடர்ந்து அரசு அலுவலகங்களிலும், அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் எடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் காளிநாதம்பாளையம் பொன்நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்திற்குள் தவெக ஒன்றிய நிர்வாகிகள் சிலர் தங்களது கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் படத்துடன் நுழைந்துள்ளனர். அங்குள்ள ஆசிரியர்களிடம் கட்சியின் தலைவர் படத்தை வழங்குவது போலவும், அலுவலக சுவரில் அவரது படத்தை மாட்டுவது போலவும் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள அரசு ரேஷன் கடையிலும் முதல்வர் படத்தை மாட்டி வீடியோ பதிவு செய்து சினிமா பாடலுடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். தலைமை கழகத்தின் கட்டுப்பாட்டையும், அரசின் விதிமுறைகளையும் மீறி செயல்படும் கட்சியினர் மீது முதல்வரும், அமைச்சரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Chief Minister ,Thavekas ,Palladam ,Tiruppur ,Minister ,
× RELATED தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தமிழக...