×

சென்னையில் 15 நாளில் 65 பேருக்கு டெங்கு பாதிப்பு: ஊழியர் பற்றாக்குறையால் மாநகராட்சி திணறல்

சென்னை: நடப்பு ஜூலை மாதத்தில் மட்டும் சென்னையில் குறைந்தபட்சம் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெங்கு பரவல் பருவம் பொதுவாக ஜூன் மாதத்திலேயே தொடங்கி, நவம்பர் மாதம் வரை உச்சத்தை எட்டும் என்பது அறியப்பட்ட உண்மையாக இருந்தபோதிலும், சென்னை மாநகராட்சி இதுவரை தேவையான முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 65 பேருக்கு பாதிப்பு உறுதியான பிறகுதான், வீடுகள்தோறும் கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இது ஏன் முன்னரே செய்யப்படவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் 2,073 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதன் விகிதப்படி, ஒவ்வொரு 500 வீடுகளுக்கும் ஒரே ஒரு பணியாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு, நகரின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கண்காணிப்பது சாத்தியமில்லை என பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இதற்கிடையே, இதுவரை பணிகள் தொடங்கப்படாத 8,000 புதிய கட்டுமான இடங்களை மாநகராட்சி ஆய்வு செய்துள்ளது. இத்தகைய கட்டுமான தளங்களில் தேங்கியுள்ள நீர் கொசு இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமையக்கூடும் என்பதால், சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளில் இறங்கியுள்ளது.பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில், நோய் பரவல் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மாநகராட்சி இனியேனும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Chennai ,
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு:...