சேந்தமங்கலம், ஜூலை 15: கொல்லிமலையில் ஆனி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஆகாய கங்கையில் நீராடி வழிபாடு நடத்தினர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மீகப் பகுதியாகவும் உள்ளது. ஏராளமான சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாற்று சுவடுகள் சொல்கிறது. மூலிகை வனம் நிறைந்த கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், மாசி பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொல்லிமலைக்கு வருவார்கள், நேற்று ஆனி அமாவாசை என்பதால் கடந்த இரு நாட்களாக கரூர்,
சேலம், திண்டுக்கல், ஈரோடு, ஆத்தூர், தம்மம்பட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். புனித தீர்த்தமாக கருதப்படும் அறப்பளீஸ்வரர் கோயில் எதிரே உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அறப்பளீஸ்வரர், எட்டுக்கை அம்மன், மாசிபெரியசாமி, நாச்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மாசி பெரியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் பில்லி சூனியம் விலக, தொழில் தடை நீங்க தேங்காய்களை உடைத்து சேவல்களை பலியிட்டு வழிபாடு நடத்தினர். அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் வாழவந்திநாடு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
