×

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி

 

நாமக்கல், ஜூலை 15: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் இன்று நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயர் சூட்டப்பட்ட ஜூலை, 18ம் தேதி மாநில அரசு ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6 முதல், பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள், இன்று 15ம்தேதி காலை 9.30 மணிக்கு நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடக்கிறது.

போட்டி விவரம்: இந்த போட்டியில் முதன்மை கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள், பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொள்ள வேண்டும். ‘தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும், நான் விரும்பும் தமிழ்நாடு, அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு, இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டியும் நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். முதல் பரிசுபெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : NAMAKKAL ,TAMIL DEVELOPMENT DEPARTMENT ,District Collector ,Madhubalan ,Tamil Nadu ,State Government ,
× RELATED நாமக்கல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 852 மனுக்கள் குவிந்தன