×

சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைக்க நிபந்தனையுடன் அனுமதி

 

நாமக்கல், ஜூலை 15: நாமக்கல் பூங்கா சாலையில் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் மாநகராட்சி அலுவலர்கள் கடன் வசதியும் செய்து கொடுத்துள்ளனர். பூங்கா சாலையில் உள்ள கடைகளை மாநகராட்சி அலுவலர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி திடீரென அகற்றுவதும், பின்னர் சில நாட்களில் சிறு வியாபாரிகள் அதேஇடத்தில் கடைகள் போடுவதும் வாடிக்கையாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உழவர்சந்தையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சிறு வியாபாரிகள் கடைகள் போடக்கூடாது என உழவர்சந்தை அலுவலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கடிதம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் மாநகராட்சி நிர்வாகம் சிறு வியாபாரிகளின் கடைகளை அதிரடியாக அகற்றியது. இதனால் அதிருப்தி அடைந்த சிறு வியாபாரிகள் அடுத்த நாளே உழவர்சந்தை முன் சாலையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். இதனால் உழவர்சந்தை வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இடையே மோதல் உருவானது.அதைத்தொடர்ந்து, உழவர்சந்தை விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் கலெக்டர் மதுபாலனை தனித்தனியே சந்தித்து முறையிட்டனர். அப்போது சிறு வியாபாரிகள், கடைகளை அகற்றியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி கடைகள் போட்டுகொள்ள அவர்கள் அனுமதி கேட்டனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகமும், உழவர்சந்தை அலுவலர்களும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இதனால் கடந்த ஒரு வாரமாக சிறு வியாபாரிகள் கடைகள் போட முடியாமல் தவித்தனர். திடீரென அவர்கள் பூங்கா சாலையில் கடைகள் போடுவதும், அதை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்பபடுத்துவம் தொடர்ந்து வந்தது. இதையடுத்து சிறு வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் சென்று முறையிட்டனர்.
இந்த நிலையில் உழவர்சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் சிறு வியாபாரிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து பூங்காசாலையில், உழவர்சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சாலையோரம் நேற்று சிறு வியாபாரிகள் வரிசையாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.

இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்ததால் சிறு வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இன்றி சாலையோரங்களில் மட்டும் கடைகள் போட்டு கொள்ளவேண்டும். இதற்காக குறிப்பிட்ட பகுதிகள் ஒவ்வொரு சிறு வியாபாரிகளுக்கும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது என்றனர். இதன் மூலம் கடந்த இரண்டு மாதமாக பூங்காசாலையில் நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

Tags : Namakkal ,Namakkal Park Road ,
× RELATED நாமக்கல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 852 மனுக்கள் குவிந்தன