- காங்கிரஸ்
- Majhi
- மன்மோகன் சிங்
- குரேஷி பாகிர்
- புது தில்லி
- முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி
- முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ் ஒய் குரேஷி
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிய அதிர்ச்சி தகவலை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது புதிய புத்தகத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான உணர்வுப்பூர்வமான சந்திப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, அப்போதைய ஒன்றிய சட்ட அமைச்சரான சல்மான் குர்ஷித் (காங்கிரஸ் மூத்த தலைவர்) சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக அறிவித்ததற்கு எதிராக பாஜக அளித்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியதாகக் கூறி அவருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் தலைவர்களும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகத் தேவையற்ற அவதூறு பேச்சுகளில் ஈடுபடத் தொடங்கினர். அதிருப்தியடைந்த நான், பிரதமரின் ஊடக ஆலோசகரான ஹரிஷ் காரேவை ஒரு விழாவில் சந்தித்து, ‘அமைச்சர்களின் இந்த அவதூறு பேச்சு குறித்து ஊடகங்களிடம் நான் பேசினால், உங்கள் அரசு தப்பிக்க இடம் தேடி ஓட வேண்டியிருக்கும்’ என்றேன்.
இந்தச் செய்தியறிந்த பிரதமர் மன்மோகன் சிங், மறுநாளே பதற்றத்துடன் என்னை தனது இல்லத்திற்கு அவசரமாக சந்திக்க அழைத்தார். நான் அங்கு சென்றபோது வாசலிலேயே காத்திருந்த பிரதமர், ‘நீங்கள் அப்படி நினைத்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிகுந்த மனவேதனையுடன் கூறினார். அதிர்ச்சியடைந்த நான், அடுத்த 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசி பிரதமரை அமைதிப்படுத்தியதோடு, எனது வருத்தம் அமைச்சர்களின் தேவையற்ற பேச்சுகள் குறித்ததுதானே தவிர பிரதமர் மீது அல்ல என்பதை விளக்கினேன். அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தியாவின் உலகளாவிய பெருமைக்கு நேர்மையான தேர்தல்களே காரணம் என்று கூறினார். மேலும் தனது அமைச்சர்களை எச்சரிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, ‘உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக என்னைச் செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று உறுதியளித்தார்’ என்று அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
