புதுடெல்லி: ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இடைநிலை இலக்கை தாண்டியுள்ளதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசு தரவுகள் காட்டுகின்றன. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ”பிரதமர் மோடி அரசின் கடந்த 12 ஆண்டுகளில் பணவீக்கம் சாதாரண குடும்பங்களின் வரவு செலவுத் திட்டங்களைச் சீர்குலைத்துள்ளது. சில்லறை பணவீக்கம் 4.38 சதவீதத்தை எட்டியுள்ளது.
அதே நேரத்தில் கிராமப்புற இந்தியாவில் இது 4.74 சதவீதமாக உள்ளது என்றும் அரசு தரவுகளே இப்போது வெளிப்படுத்துகின்றன. பணவீக்கத்துடன் வங்கி வட்டி விகிதங்கள் உயரும் என்ற அச்சமும் தற்போது உள்ளது. இது நடுத்தர வர்க்கத்தின் மீதான வீடு மற்றும் கார் மாதாந்திர தவணைகளின் சுமையை அதிகரிக்கக்கூடும். பிரதமர் மோடி எப்போது சாமானிய மக்களின் வேதனை குறித்து வாய் திறப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
