லிப்ட் கொடுத்தவரிடம் வழிப்பறி: இரு வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை

காரைக்குடி, ஜூலை 14: காரைக்குடியில் லிப்ட் கொடுத்தவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு, தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காரைக்குடி மரக்கடை சந்து பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் மணிகண்டன் (43). இவர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தனது டூவீலரில் னிவாச நகர் பகுதிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபருக்கு லிப்ட் கொடுத்து அழைத்து சென்றுள்ளார். அந்த நபர் இறங்கும் இடத்தில் அவரது நண்பருடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியதுடன், அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்துச்சென்றனர்.

இது தொடர்பாக மணிகண்டன் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கணேசபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் விக்னேஷ்(24), பனந்தோப்பு கருப்பையா மகன் செல்வக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை காரைக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: