கோவில்பட்டி: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79), சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்தியவர். ‘அஞ்ஞாடி’ என்ற அவரது நாவலுக்காக கடந்த 2014ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது பெரும்பாலான படைப்புகள் கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. எழுத்தாளர் பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி செல்லம். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது 6வது நாவலான “அஞ்ஞாடி’’, 2014ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது. மற்றொரு நாவலான “வெக்கை’’ அசுரன் என்ற பெயரில் தமிழ் திரைப்படமாக வெளிவந்துள்ளது. பூமணியின் உடல் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று (14ம் தேதி) மதியம் 12 மணியளவில் அவரது உடல், கோவிபட்டியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
