×

நாகர்கோவில் சிறையில் கைதி அடித்து கொலை?.. உறவினர்கள் மறியல்; போலீஸ் மீது குற்றச்சாட்டு

 

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். இவரது மகன் சபரி வர்மன் (34). மாற்றுத்திறனாளி. பா.ஜ. கிளை நிர்வாகி. இவர், ஈத்தங்காட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ஆனந்தவல்லி (24) என்ற மனைவியும், வினு வர்மன் (4) என்ற மகனும் உள்ளனர். கடந்த 9 ம்தேதி மதியம் 1.30 மணியளவில், சபரிவர்மன் கடையில் தென்தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளஸ்சிங் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையில் இருந்து குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி சபரிவர்மனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கடந்த 10ம்தேதி, சிறையில் இருந்த சபரிவர்மனை, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில், சிறையில் சபரிவர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை சிறை காவலர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதனையில் சபரிவர்மன் இறந்தது தெரிய வந்தது. உடனடியாக உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் அங்கு வந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டனர். அப்போது சபரிவர்மன் சாவில் மர்மம் உள்ளது. அவரது உடலை அவசரமாக பிணவறைக்குள் கொண்டு சென்றது ஏன்? உறவினர்களிடம் உடலை ஏன் காட்டவில்லை என கூறி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

த.ெவ.க. நிர்வாகிகள் சிலர் வந்து சபரிவர்மனின் மனைவி மற்றும் உறவினர்களை பிணவறைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பிணவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் போனில் சிலரை தொடர்பு கொண்டு பிணவறையை திறக்க வேண்டும் என கூறினர். ஆனால் சாவி இல்லை என கூறி விட்டனர். இதையடுத்து சபரிவர்மனின் குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவக்கல்லூரி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணியம், கலையரசன் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் குடும்பத்தினர், சபரிவர்மனை அடித்து கொன்று விட்டனர். அதனால் தான் உடலை காட்ட மறுக்கிறார்கள்.

இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மறியலின் போது, சபரிவர்மனின் சகோதரி திடீரென மயக்கம் அடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து போலீசார் மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அவர் ஆம்புலன்சில் ஏற மறுத்து விட்டார்.
இதையடுத்து மதியம் 12.15க்கு எஸ்.பி. ஸ்டாலின் அங்கு வந்தார். அவரிடம் சபரிவர்மனின் மனைவி ஆனந்த வல்லி, எனது கணவரை திட்டமிட்டு அழைத்து சென்று சிறையில் தள்ளி கொன்று விட்டனர். ரூ.25 ஆயிரம் கேட்டு போலீசார் எங்களை மிரட்டினர். தற்போது உடலை கூட காட்ட மறுக்கிறார்கள். அவரது உடலையாவது காட்டுங்கள் என்றார். இதையடுத்து அவர்களை பிணவறைக்கு எஸ்.பி. ஸ்டாலின் அழைத்து சென்றார். அங்கு சபரிவர்மனின் தாயார், அவரது மனைவி ஆகியோர் சென்று சபரிவர்மனின் உடலை பார்த்தனர். பின்னர் வெளியே வந்த அவர்களிடம், எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தாய், என் மகனை அநியாயமாக கொன்றுவிட்டனர் என்று கூறி கதறி அழுதார். அதற்கு எஸ்பி, பிரேத பரிசோதனை நடத்தினால் தான் உண்மை சம்பவத்தை அறிய முடியும். போலீஸ் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார். அப்போது, வெளி மாவட்ட டாக்டர்கள் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கூறினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதி அளித்தார். இந்நிலையில், உடலை பார்த்த உறவுக்கார இளைஞர், சபரிவர்மனின் கையில் முறிவு போன்ற காயம் உள்ளது. முதுகில் ரத்த கட்டுகள் உள்ளன. விதைப்பகுதியும் வீங்கியுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, உறவினர்கள் மீண்டும் மருத்துவமனை கிழக்கு வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை கைவிட்டனர். மாஜிஸ்திரேட் 3 மணி நேரம் விசாரணை: பிணவறைக்கு மாலை 5 மணியளவில் ஜே.எம்.2வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி வந்தார். அவர் இரவு 8 மணி வரை சபரிவர்மனின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் வந்தனர். இரவில் பிரேத பரிசோதனை செய்ய எஸ்பி, கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆனால், சபரிவர்மனின் உறவினர்கள் பகலில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினர். இதற்கு போலீசார் சம்மதம் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

ரூ.1 கோடி நிவாரண நிதி, அரசு வேலை வழங்க வேண்டும்
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி கூறுகையில், உயிரிழந்த சபரிவர்மன், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு மனைவி, 4 வயதில் குழந்தை உள்ளனர். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. இப்போது அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே முறையான விசாரணை நடத்த வேண்டும். கரூரில் இறந்த 41 பேரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி மட்டுமின்றி அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே முதலமைச்சர் விஜய், சிறையில் இருந்த போது இறந்த சபரிவர்மனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன் இறந்த சபரிவர்மனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும். முதற்கட்டமாக சபரிவர்மனின் குடும்பத்துக்கு வாழ்வாதார நிதி வழங்க வேண்டும். அவரது மனைவி பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். 4 வயதில் குழந்தை இருக்கிறது. எனவே உடனடியாக அரசு வேலையும் அறிவிக்க வேண்டும் என்றார்.

கரூருக்கு கொடுக்கும் போது.. இங்கே கொடுத்தால் என்ன?
மறியல் செய்த உறவினர்கள், பொதுமக்கள் கூறுகையில், கரூரில் நடிகரை பார்க்க போய் இறந்தவர்களுக்கு தமிழக அரசு வேலை கொடுத்து உள்ளனர். ஆனால் இங்கு சபரிவர்மன் சிறையில் இறந்துள்ளார். போலீஸ் தாக்கி அவர் இறந்திருக்கிறார். எனவே அவரின் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுத்தால் என்ன? உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்றனர்.

Tags : Nagercoil ,Sasitharan ,Eathangadu Narayanputhur ,Thenthamaraikulam ,Kumari district ,Sabari Varman ,
× RELATED பட்டா மாறுதலுக்கு தடை நீக்கிய ரூ.25...