நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த 10ம் தேதி முதல், முட்டை விலையை என்இசிசி தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தி வருகிறது. நேற்று முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்த்தி, 670 காசாக நிர்ணயம் செய்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். கடந்த ஆண்டு ஒரு முட்டையின் அதிகபட்ச விலை 645 காசாக இருந்தது. தற்போது அதைவிட 25 காசுகள் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், `கோடைகாலம் முடிந்து மழை காலம் துவங்கியும் வெப்பஅலையின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் 10 சதவீத அளவிற்கு பண்ணைகளில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் முட்டைக்கு டிமாண்ட் ஏற்பட்டு வருகிறது. இதனால் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது,’ என்றனர்.
