நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் நேற்று முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து, ரூ.6.60க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 3 முறை முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம், முட்டை விலையில் 5 காசுகள் என்இசிசி உயர்த்தியது.
இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.6.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 660 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் முட்டை விலையில் 4வது புதிய உச்சமாகும். நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், சுமார் 9 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
கோடைக்காலம் முடிவடைந்து பருவமழை காலம் துவங்கியபோதும், வெப்ப அலை தொடர்ந்து வருவதால் கோழிப்பண்ணைகளில் முட்டையின் உற்பத்தி இன்னும் பழையபடி அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் முட்டை விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.
மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் நாமக்கல்லில் இருந்து 55 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ரூ.8 வரை முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
