திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சாப்ரா கிராமத்தை சேர்ந்தவர் சிரிஷ்குமார் (34), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுலோச்சனா. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாப்ரா கிராமத்தில் வசிக்கும் திருமணமான 34 வயது பெண்ணுடன் சிரிஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது கணவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் 34 வயது பெண், தன் குழந்தைகளுடன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மூசாபேட்டில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். சிரிஷ்குமார், அப்பெண்ணை சந்திக்க அடிக்கடி மூசாபேட் சென்றுள்ளார். அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த சுலோச்சனா, கணவரை கண்டித்துள்ளார். குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஜோடி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுலோச்சனா, கணவரை தேடி வந்தார். அப்போதுதான், கள்ளக்காதலியுடன் தமிழ்நாட்டில் கோவையில் வசிப்பது தெரிந்தது. இதையடுத்து உறவினர்களுடன் சென்று இருவரையும் கண்டுபிடித்து நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அந்த ரயில், நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி அருகே வந்தபோது சிரிஷ்குமாரும் அவரது கள்ளக்காதலியும் கழிவறைக்கு சென்று வந்தனர்.
சிறிது நேரத்தில் இருவரும், சுலோச்சனா அருகே மயங்கி விழுந்தனர். இதனால் பதற்றமடைந்த சுலோச்சனா, செகந்திராபாத் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்களின் பரிசோதனையில் இருவரும் விஷம் குடித்தது தெரிய வந்தது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
