*பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே பரிகாரம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் நகை பணம் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றவனை ஊர் பொதுமக்கள் மடக்கி பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிர் என்பவரது மனைவி செல்ல பாப்பு (25). இவர் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு குறி சொல்வது போல் வந்த ஒருவன் உனது வீட்டில் சில வேலைப்பாடுகள் எல்லாம் உள்ளது, அதை போக்கித் தருகிறேன் என சில குறிகளை சொல்லியுள்ளார்.
அதன் அடிப்படையில் அந்த பெண்மணி குறிகேட்க ஒத்துக் கொண்டுள்ளார். 40 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் எனக்கூறிய அந்த நபர், வீட்டிற்குள் உள்ளே வந்தால்தான் சொல்ல முடியும் என கூறி வீட்டிற்குள் சென்று செம்பு, கடுகு ஆகியவற்றை எடுத்து வந்து வைக்கும்படி கூறியுள்ளார்.
பின்னர் கையில் மை தடவி ஏதோ பார்க்க வேண்டும் எனக் கூறி வசியம் செய்துள்ளார். தொடர்ந்து உன்னிடம் பணம் நிறைய இருக்கிறது, பணத்தை கொண்டு வந்து வை என கூறியதால், செல்ல பாப்பு தனது வீட்டிலிருந்த 4000 ரூபாய் ரொக்கம், தான் அணிந்திருந்த தோடு, செயின். மோதிரம் ஆகியவற்றை கொண்டு வந்து வைத்துள்ளார்.
பின்னர் அந்த நபர் அவர் நம்பும்படி சில வார்த்தைகளை கூறிவிட்டு, அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு டூவீலரில் தப்பி சென்றுள்ளான். சிறிது நேரத்தில் சுய நினைவிற்கு வந்த செல்லப் பாப்பு தனக்கு நடந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் அவனை விரட்டி சென்று பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர் அவனிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் அவனை பிடித்து விசாரித்தபோது, அவன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெமினி என்று கூறி உள்ளான். பின்னர் செல்லபாப்புவிடம் இருந்து பறித்துச் சென்ற 4 ஆயிரம் ரூபாய் பணம், தோடு, செயின், மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கூத்தைப்பார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
