திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் 15 வயது மகள், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் தேர்வு எழுத வீட்டில் இருந்து படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்ததில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. போலீஸ் விசாரணையில், சிறுமி 5 பேர் தன்னிடம் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுமி கூறிய 5 பேரில் 2 பேர் தவெகவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். எங்களிடம் தெரிவிக்காமல், சிறுமியின் கர்ப்பத்தை கலைத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கூறினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமன் தங்கவேல் (40) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவர் தவெக பிரமுகர் ஆவார். மேலும் சிறுமியின் உறவினரான 15 வயது பள்ளி சிறுவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விளக்கம்: சிறுமி பலாத்கார வழக்கில் கைதான தங்கவேல் உறவினர் என்பதும், அவர் எந்த அரசியல் கட்சியையோ அல்லது எந்த அமைப்பையோ சேர்ந்தவர் அல்ல என்பதும் உறுதி செய்யப்படுகிறது என்று நாமக்கல் காவல்துறை தெரிவித்து உள்ளது.
