தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கில் முக்கிய சாட்சிக்கு சரமாரி வெட்டு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறைபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (60). இவர், அருகில் உள்ள கணபதிபாளையத்தில் ஆயில் மில், அரிசி ஆலை, ஹாலோ பிளாக் கம்பெனி, வே பிரிட்ஜ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் தனது மாமனார் முத்துசாமி (80), மாமியார் சகுந்தலா (79) ஆகியோரை வீட்டில் வைத்து பராமரித்து வருவதால் அவர்களது 40 ஏக்கர் சொத்துக்களை தங்கவேல் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த சொத்து பிரச்னையில் தங்கவேலுவுக்கும், அவரது மனைவியின் தங்கை கணவர் பாலதண்டபாணிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் கணபதிபாளையத்தில் உள்ள தனது ஆயில் மில்லுக்கு தங்கவேலு சென்றுவிட்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். மில்லை விட்டு வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த மர்மக்கும்பல், அரிவாள் மற்றும் கத்தியால் தங்கவேலுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், அவர் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணையில், தாராபுரத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம், தனது டிரஸ்டுக்கு சொந்தமான நிலத்தில் தனது சித்தப்பா தண்டபாணி (66) தனியார் பள்ளி நடத்தி வருவதாகவும், அந்த இடத்தை மீட்டுத் தரும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி நிலத்தை கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி அளக்க வந்தபோது சித்தப்பா ஏவிய கூலிப்படையால் முருகானந்தம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் அவரது சித்தப்பா உள்பட 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். வக்கீல் முருகானந்தம் கொலையை நேரில் பார்த்த முக்கிய சாட்சியாக தங்கவேலு இருந்துள்ளார். இதனால் சாட்சியை தீர்த்து கட்ட சிறையில் சதி திட்டம் தீட்டப்பட்டதா?, அல்லது மாமனார், மாமியாரிடம் சொத்தை எழுதி வாங்கிய ஆத்திரத்தில் சகலை பாலதண்டபாணி கூலிப்படையை ஏவினாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

* கூலிப்படை வந்த கார் தீ வைத்து எரிப்பு
பல்லடம் தாலுகா நெகமம் அருகே தாராபுரம் சாலை வழியாக கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரில் வந்த 3 பேர், நேற்று தாங்கள் வந்த காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, மற்றொரு காரில் தப்பி சென்றதாக நெகமம் போலீசாரிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அது ஆயில் மில் அதிபரை வெட்டிவிட்டு தப்பிய கும்பலின் காரா? என ஆய்வு செய்தனர்.

Related Stories: