×

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நெற்பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

 

திருவாரூர், ஜூலை 8: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிரை வரும் 31ந்தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026-27ம் ஆண்டு குறுவை பருவ பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கான இரு சக்கர விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது, இன்று (நேற்று) துவங்கி வைக்கப்பட்டுள்ள பேரணியானது திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

எனவே, விவசாயிகள் வரும் 31ந்தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தங்கள் நெற்பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம். வறட்சி, புயல், அதிக மழை போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இழப்புகளை ஈடுசெய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடுத்திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நடப்பு குறுவை பருவ நெல்லுக்கு பிரிமியமாக திருவாரூர்-& 1 மாவட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.513.48 மற்றும் திருவாரூர்& 2 மாவட்டத்திற்கு ஏக்கருக்கு ரூ.618.51 செலுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்.

திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் இ-சேவை மையங்கள் அல்லது தேசிய பயிர்காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்” நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,

ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பயிர் காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பெயர், வருவாய் கிராமத்தின் பெயர், புலஎண், பரப்பு, வங்கி கணக்கு எண் முதலான விவரங்களை இரசீது சீட்டில் சரிபார்த்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வித்யா, வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெயசீலன், ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வேளாண் உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) செந்தில் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kuruvai ,Tiruvarur district ,Tiruvarur ,Collector ,Mohanachandran ,Agriculture-Farmers Welfare Department ,Tiruvarur Collector ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்