×

சங்க பொருளாளரை மிரட்டிய மாநகர டவுன் சாலையில் இன்று படுத்து உருளும் போராட்டம் நடத்தவும் முடிவு

நெல்லை, ஜூலை 14: அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளரை செல்போனில் மிரட்டிய நெல்லை மாநகர நல அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கோரி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்த வியாபாரிகள் சங்கத்தினர், டவுன் சாலையில் இன்று படுத்து உருளும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். நெல்லை ைஹகிரவுண்ட் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் சிராஜ் அகமது, செயலாளர் நெகேமியா, பொருளாளர் சாஜித் ரிபாய் உள்ளிட்ட நிர்வாகிகள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்து ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: பாளை ஹைகிரவுண்ட் செயல்பட்டு வரும் எங்கள் சங்கத்தின் கீழ் 350க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் அப்பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் விற்பனையை நடத்தி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைகிரவுண்ட் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் இல்லாததால் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஏற்னவே குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளோம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு ஆய்வு நடத்திய சுகாதார ஆய்வாளர் கடைகள் முன்பு குப்பைகள் இருப்பதாக கூறி அபராதம் விதித்தார். அதிலும் ஒரு மருத்துவக் கடை முன்பாக மருத்துவ ரசீதுகளை மருத்துவ கழிவுகள் எனவும், பழக்கடைகள் முன்பிருந்த அட்டை பெட்டிகளை கட்டிட கழிவுகள் எனவும் கூறி ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மாநகராட்சி நடைமுறைகளின்படி அதிகாரபூர்வ ரசீதுகளை வழங்காமல், வியாபாரிகளிடம் அபராத தொகையை பணமாக வழங்க கேட்டு கொண்டனர். இந்நிலையில் அங்கு வியாபாரிகள் திரண்ட நிலையில், தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்க போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் கடைகள் முன்பு குப்பை தொட்டியை பயன்படுத்த தொடங்கிய நிலையில், நெல்லை மாநகர நல அலுவலர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக எங்கள் நிர்வாகிகளை திட்டி வருகிறார். குறிப்பாக எங்கள் சங்க பொருளாளரை தொடர்பு கொண்டு வாடா, போடா எனவும், கட்ட பஞ்சாயத்து நடத்துகிறீர்களா, உங்கள் சங்கத்தை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். விளக்கம் அளிக்க முற்பட்ட பொருளாளரிடம், உன் கடைக்கான மின்சார ரசீதையும், மாநகராட்சி வரி ரசீதையும் கொண்டு வா என திட்டியுள்ளார். ஒரு அதிகாரி, சட்டபூர்வ ஒரு சங்கத்தையும், அதன் பொறுப்பாளரையும் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது. அவர் பேசியதற்கான ஆடியோ விவரங்களை எங்கள் சங்கம் சார்பில் ஆதாரமாக தேவையான நேரத்தில் தருகிறோம். எனவே சங்க பொருளாளரை மிரட்டிய நெல்லை மாநகர நல அலுவலர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஹைகிரவுண்ட் பகுதியில் வியாபாரிகளை துன்புறுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து கண்டன போராட்டம், முழு கடையடைப்பு போராட்டம், நெல்லை மாநகராட்சி முற்றுகை போராட்டம் ஆகியவற்றை விரைவில் நடத்த உள்ளோம். இவ்வாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Town Road ,Nellai ,Nellai Municipal ,Welfare Officer ,All Traders' Association ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்