×

முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தடையில்லை: திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரம், பற்றி அண்மையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”கரூர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இப்படி பேசுவது சாட்சிகளை கலைப்பதற்கான வழிவகையை உருவாக்கும். எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யஉத்தரவிட வேண்டும்.

மேலும் கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு, கருணை அடிப்படையிலான அரசு வேலை தருவது உச்ச நீதிமன்றம் வகுக்கும் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அவை வழங்கப்பட வேண்டும். அந்த வழக்கில் விசாரணை வளையத்தில் இருக்கும் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகிய அனைவரும் பொதுவெளியில் கரூர் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்” கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் மக்களிடையே ஒரு கருத்தை திணிக்க முயற்சி நடக்கிறது .எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். பொதுவெளியில் வெவ்வேறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக கரூர் விவகாரத்தில் முதல்வர் விஜய் தான் முதல் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘முந்தைய ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூட விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை. எனவே ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள். நிலுவையில் வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை அமைச்சர்களோ முதலமைச்சராகவோ தெரிவித்தால் அதற்கு சிபிஐ விசாரணையை எப்படி கோர முடியும்.

கரூர் விவகாரத்தில் முதல்வரோ அல்லது அமைச்சர்களோ கருத்துக்களை வெளியில் பரப்பியிருந்தாலோ அல்லது பேசி இருந்தாலோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேண்டுமானால் தனியாக தொடரலாம். அதற்கு எந்தவித தடையும் நாங்கள் விதிக்கவில்லை. அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்றால், நீங்களும் வேண்டுமானால் பதில் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு தடை விதிக்க வேண்டுமா? ஒரு முதல்வர் இப்படி தான் பேச வேண்டும் என்று நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த மனு மீது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதைநீதிபதிகள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மனு திரும்பப்பெறப்பட்டது.

* உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டியிடம் முறையிட முடிவு
உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கூறுகையில், கரூரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் நிறுத்தி வைக்க வேண்டும் என திமுக தரப்பின் மனுவில் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. அதேப்போன்று விஜய் கரூர் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் திமுக தரப்பின் மனுவில் குறிப்பிடவில்லை.

வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் திமுகவிற்கு எந்தவித பின்னடைவும் கிடையாது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது மட்டுமில்லாமல், உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள மூன்று பேர் கமிட்டியிடமும் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Vijay ,Minister ,Adhav Arjuna ,Supreme Court ,DMK ,New Delhi ,Karur ,DMK Organization ,R.S. Bharathi ,Supreme Court.… ,
× RELATED பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய...