திருப்பத்தூர் டிஎஸ்பி ஆபீஸ் அருகே 50 வயது பெண் பாலியல் பலாத்காரம்: போதை வாலிபர் வெறிச்செயல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகிலேயே அதிகாலையில் வேலைக்கு சென்ற 50 வயது பெண்ணை போதை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே சமீபத்தில் பெண் வியாபாரியை கொலை செய்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சவால் ஏற்பட்டது.

கொலை நடந்த பகுதியில் டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு பூங்கா, மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கியூ பிரான்ச் போலீஸ் நிலையம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அலுவலகம் என அப்பகுதி முழுவதும் அரசு கட்டிடங்களும், அலுவலகங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதுதவிர போலீசார் எந்நேரமும் அப்பகுதியில் நடமாடும் நிலையில் பெண் வியாபாரி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கொலை நடந்த பகுதியில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூரில் பெண் வியாபாரி கொல்லப்பட்ட அதேபகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் டிஎஸ்பி அலுவலகம் அருகே பலாத்கார சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: திருப்பத்தூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். இவர் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் அருகே வீரபத்திர முதலியார் பூங்கா பகுதியில் அந்த பெண் நடந்து சென்றார்.

அப்போது அவ்வழியாக போதையில் வந்த வாலிபர் அந்த ெபண்ணை வழிமறித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இருப்பினும் அவரது வாயை பொத்தி அங்குள்ள பூங்காவுக்குள் இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சரத்குமார்(23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டிஎஸ்பி அலுவலகம் அருகிலேயே தனியாக நடந்த சென்ற பெண்ணை போதை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: