வீடு புகுந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அமைச்சர் ஆஜராக கோர்ட் உத்தரவு

புதுச்சேரி: வீடு புகுந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் தமிழக அமைச்சர் மரியவில்சன் புதுவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தவெக சார்பில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன், தற்போது தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இவர், கடந்த 2022 ஆகஸ்ட் 8ம் தேதி தொழில் போட்டி காரணமாக, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது உடன்பிறந்த தம்பி மரி கிளோத் மற்றும் அவரது மனைவி கேரளின் ஆகியோரை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த மரி கிளோத், அவரது மனைவி கேரளின் ஆகியோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் மானத்தை அவமதித்தல், கொலை மிரட்டல் மற்றும் கூட்டுச் சதி உள்பட 8 பிரிவுகளின் கீழ் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகை நகலை நேரில் பெற்றுக்கொள்வதற்காக இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சேரலாதன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: