புதுச்சேரி: புதுச்சேரி மூலகுளம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பேட்டி அளித்தார். அப்போது, கூட்டணியிலிருந்து வெளியே வந்த பிறகு திமுகவை விமர்சிப்பது குறித்து ஒரு நிருபர்கள் கேட்டபோது, ‘‘இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. இது வழக்கமான வாடிக்கையான ஒன்று’’ என்றார்.
கரூர் விவகாரத்தில் மனசாட்சி இல்லாமல் ஓடி வந்தவர் என விஜய்யை விமர்சித்தீர்களே என்று கேட்டபோது, ‘‘அன்று கரூர் போகவில்லை. அதனால் விமர்சித்தேன். இன்று அவர் போகிறார். மனசாட்சி இருக்கிறது என்று சொல்கிறேன்’’ என்றார். அதற்கு நிருபர் ஒருவர் அன்று விஜய்க்கு மனசாட்சி இல்லை. இன்று இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஆவேசமான வைகோ, ‘‘நீங்க சொன்னதையே சொல்கிறேன். அநாவசியமாக எதாவது சொல்லி அங்கே நடந்த மாதிரி பத்திரிகையாளர்களிடம் வைகோ சண்டை போட்டார் என செய்தி போட முயற்சித்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். வேண்டாம் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்லியாச்சு. நீங்கள் வேறு கேள்வி கேளுங்கள்’’ என்றார்.
திமுகவிலிருந்து மதிமுக விலகியதற்கு நிம்மதியாக இருக்கிறது என எம்.பி. துரை வைகோ சொல்லி உள்ளாரே என்று கேட்டபோது, ‘‘லட்சக்கணக்கான தொண்டர்கள் எப்படி நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களோ, அந்த நிம்மதியை தான் திருச்சி எம்.பி. வெளிப்படுத்தி உள்ளார்’’ என்றார்.
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின், சொல்லாததையும் செய்துள்ளார் என தெரிவித்தீர்களே என்று கேட்டபோது, ‘‘கூட்டணி இருந்த காலத்தில் நல்ல காரியங்கள் நடந்தபோது நான் பாராட்டினேன். அதே நேரத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்ட போது தாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தேன். அமைதியாக இருந்ததற்கு கூட்டணி தர்மம்தான் காரணம்’’ என்றார். அதிக முறை உங்களை எம்பியாக வைத்து அழகு பார்த்தது திமுக என்று கேட்டபோது, ‘‘அதைவிட லட்சம் வரை அண்ணாவையும் இயக்கத்தையும் தூக்கி நாடாளுமன்றத்தில் நிறுத்தியவன் நான்’’ என்றார்.
கல்லாப்பெட்டி கூட்டணி என்று ஏற்கனவே விஜய் விமர்சித்தது குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, எத்தனை முறை நீங்கள் கேள்வி கேட்பீர்கள். நீங்கள் யார்? உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இங்கு வந்துள்ளீர்கள். நிறுத்துங்கள். வம்புக்காக கேட்கிறான் அந்த ஆளு. வம்புக்காக கேட்குறான். அதிக பிரசங்கி. அதிக பிரசங்கி உனக்குதான் கேள்வி கேட்க தெரியுமா? உனக்குதான் ஜனநாயக உரிமை இருக்கிறதா? என செய்தியாளரை ஒருமையில் வசைபாடினார். அப்போது செய்தியாளர் கேள்வி எழுப்பாத வகையில் அவரை மதிமுக நிர்வாகிகள் மறைத்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
