×

வரி பாக்கி செலுத்திய கடைக்கு பூட்டு அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் மறியல்: மணலியில் போக்குவரத்து பாதிப்பு

மணலி: மணலியில் வரி பாக்கி செலுத்திய டீ கடைக்கு பூட்டு போட்ட குடிநீர் வழங்கல் வாரிய வருவாய் பிரிவு அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணலி பாடசாலை தெருவை சேர்ந்தவர் ஆசிம். இவர், அதே தெருவில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் குடிநீர் வழங்கல் வாரிய வருவாய் பிரிவு அதிகாரிகள், இந்த கடைக்கு வந்து, குடிநீர் வரி பாக்கி உள்ளது. அதை ஏன் செலுத்தவில்லை, என கேட்டுள்ளனர். அதற்கு கட்டிடத்தின் உரிமையாளர் மாடியில் உள்ளார். அவரிடம் சென்று கேளுங்கள் என்று ஆசிம் கூறினார். இதையடுத்து, அதிகாரிகள் மாடியில் உள்ள கட்டிட உரிமையாளரை சந்திக்கச் சென்றனர். பின்னர் ஆன்லைன் மூலம் வரி பாக்கியை சம்பந்தப்பட்ட உரிமையாளர் செலுத்தி உள்ளார்.

இதனிடையே அதிகாரியுடன் வந்த ஊழியர், வரி பாக்கி செலுத்தவில்லை எனக் கூறி டீ கடையின் ஷட்டரை இழுத்து பூட்டி விட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிம் அதிர்ச்சி அடைந்தார். இதனைக் கண்ட கட்டிட உரிமையாளர், குடிநீர் வரி செலுத்திய பின் ஏன் கடைக்கு பூட்டு போட்டீர்கள், என்று குடிநீர் வருவாய் பிரிவு அதிகாரியிடம் கேட்டார். அதற்கு ஊழியர் திறந்து விடுவார்கள் என அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. தகவலறிந்த மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் டீ கடை முன்பு திரண்டனர். அலட்சியமாக செயல்பட்ட குடிநீர் வழங்கல் வருவாய் பிரிவு அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

தகவல் அறிந்த மணலி காவல் உதவி ஆணையர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளை சமாதானம் செய்தனர். பின்னர், மணலி குடிநீர் வழங்கல் வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் தவறுதலாக ஊழியர் பூட்டிவிட்டதாக கூறி வியாபாரிகள் சங்கத்தினரிடம் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Manali ,Water Supply Board Revenue Division ,Asim ,Manali School Street ,
× RELATED வாழ்க்கை ஒரு வட்டம் என்ற பழமொழி...