சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினரை கைதுசெய்வதா? அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. ஜெயலலிதா காலத்தில் தன் மீது 16 அவதூறு வழக்கு போட்டும் கூட என்னை கைதுசெய்யவில்லை.
ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திமுக ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டது இல்லை. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், சட்டரீதியாக சந்திப்போம். தேர்தல் வர உள்ளதால் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆதவ் பேசியுள்ளார். கரூர் நெரிசல் குறித்து ஆதவ் அர்ஜுனா பொய்யும் புரட்டும் பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைது செய்வார்களா? கரூரில் 41 பேர் இறந்தபோது ஓடிச் சென்றவர்தான் முதல்வர் விஜய். ஆதவ் பேச்சு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போகிறோம் என்று கூறினார்.
