×

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவோடு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் அதிரடி கைது: விசாரணையில் திடுக் தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவோடு டெல்லியில் முக்கிய இடங்களை தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில் டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனைகளை நடத்தினர். இதில், டெல்லியில் தாக்குதலுக்கான இடங்களை வேவு பார்த்த ககன்பிரீத் என்பவனை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 24ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

அவன் கொடுத்த தகவலின் பேரில், பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பதுங்கியிருந்த சுப்தீப் சிங் என்கிற விஷாலை துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மொபைல் போன்களுடன் போலீசார் கைது செய்தனர். மேலும், குர்ஜந்த் சிங் மற்றும் சாஜன் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 அதிநவீன துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள் மற்றும் 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 பேரிடமும் தனித்தனியாகவும், கூட்டாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவோடு செயல்படும் பயங்கரவாதி ஷாசாத் பட்டி என்பவனின் வழிகாட்டுதலின்படி, டெல்லியில் முக்கிய இடங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற கையாளுநரான ஷாசாத் பட்டி, இந்தியாவில் உள்ள இளைஞர்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக கண்டறிந்து, அவர்களுக்கு பணம் மற்றும் போதைப்பொருள் ஆசை காட்டி மூளைச்சலவை செய்து தீவிரவாத பாதையில் இழுத்துள்ளான் என்பது தெரியவந்தது. கைதான சுப்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் பஞ்சாபின் சர்வதேச எல்லை பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள்.

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போடப்படும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை பெற்று, அவற்றை விற்று பணமாக்குவது மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்துவதுதான் இவர்களது வேலை. டெல்லியில் கைது செய்யப்பட்ட ககன்பிரீத், பாகிஸ்தான் கையாளுநர்களின் நேரடி உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள முக்கிய காவல் நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை ரகசியமாக வீடியோ எடுத்து, ‘மறைக்குறியீடு செய்யப்பட்ட’ செயலிகள் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளான்.

மேலும், டெல்லியின் முக்கிய பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி, அங்குள்ள காவல் துறையினரை குறிவைக்கவும், இதன் மூலம் டெல்லி – என்சிஆர் பகுதியில் பெரும் அமைதியின்மையை உருவாக்கவும் இவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து ‘ஷாசாத் பட்டி’ கட்டளையிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,Pakistan ,ISI ,New Delhi ,Delhi Police Special Cell ,
× RELATED ராமர் கோயில் நன்கொடை முறைகேடு...