- பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
- தஞ்சாவூர்
- பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம்
- தெட்சிணாமூர்த்தி
தஞ்சை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக பள்ளி தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்திக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் என்ற அமைப்பினர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த நிலையில் இன்று அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முகப்பு வாயிலின் வெளியே திடீரென ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் பள்ளியின் தலைமையாசிரியருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்திய பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்பு பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை மாற்றம் செய்துவிட்டு இங்குள்ள முதுகலை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதற்காக தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டி இதுபோன்று தலைமையாசிரியருக்கு எதிராக போஸ்டர் ஒட்டி அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்கி வருகின்றனர். எங்களுக்கு தெட்சிணாமூர்த்தி தான் தலைமையாசிரியராக இருக்க வேண்டும். அவரை மாற்றினால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
