அரியலூர், ஜூலை 2: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது. அதனைத்தொடர்ந்து, தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutritions & Dietetics), உடல் எடை சீரமைப்பு (Slimmiing & Weight loss Courses) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர, 18 முதல் 35 வயதிற்குள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள். ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பயிற்சி நடைப்பெறவுள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். மேலும், இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15000 முதல் ரூ.20000 வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tahdco.com < //www.tahdco.com/ > என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் அணுகவும். தொலைப்பேசி எண்-04329-228315-னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
