பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி கண், வாயை மூடிக்கொண்டு கையெழுத்திட்ட விவசாயிகள்: கையெழுத்து இயக்கம் தொடங்கியது

 

அரியலூர், ஜூலை 6: விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யக் கோரி, அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில், அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். மேற்கண்ட கோரிக்கையை அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர், கடந்த வாரம் திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக, வி. கைகாட்டி பகுதியில் கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கினர். அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க. சண்முகசுந்தரம் தலைமையிலான குழுவினர், வி.கைகாட்டி பகுதி விவசாயிகளிடம் கண், காது, வாயை, மூடிக்கொண்டு கையெழுத்தை பெற்றனர்.

அப்போது தங்க.சண்முகசுந்தரம் கூறுகையில், அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளிடம் கையெழுத்தைப் பெற்று தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும். கடன் தள்ளுபடி அறிவிப்பு குளறுபடிகளால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன், தவணை தேதி முடிந்த நிலையில் விவசாயிகள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: