சென்னை: குமரியை நாசமாக்கும் அணுக்கனிம சுரங்கக் கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரக் கிராமங்களையும், ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டிய சூழலில், ஐ.ஆர்.இ.எல் (IREL) பொதுத்துறை நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டு அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் கவலையை அளிக்கிறது.
சூழலியல் ரீதியாக மிக முக்கியமான, அதேநேரம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தின் தன்மையைக் கருத்தில் கொள்ளாமல், தவெக அரசு இதற்கு கால நீட்டிப்பு வழங்கியிருப்பது, இத்திட்டத்தால் இப்பகுதியில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அரசு போதிய கவனம் செலுத்தவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், ‘இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரி பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டம் தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் என்றும், இத்தகைய திட்டங்களை கைவிட வேண்டும்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அதற்கு மாறாக அவகாசம் முடியும் அதே நாளில் மேலும் ஓராண்டுக்குக் கால நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பித்திருப்பது, தேர்தல் கால நிலைப்பாட்டிற்கும் தற்போதைய செயல்பாட்டிற்கும் இடையே உள்ள முரண்பாட்டைக் காட்டுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே கடுமையான கனிம வளம் மற்றும் மலைக் குன்றுகள் இழப்பால் தன் இயற்கை எழிலையும், பாதுகாப்பையும் இழந்து தவித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாழாகி, விவசாயம் நலிவடைந்து, கடல் அரிப்பு மற்றும் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில், கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கடலோரக் கிராமங்களில் 1144 எக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க வழிவகை செய்வது, எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த மாவட்டத்தின் சூழலியல் சமநிலையை முற்றிலுமாக சீர்குலைத்துவிடும். இத்திட்டத்திற்காக கடந்த 2024 அக்டோபரில் நடத்தவிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், மக்களின் வீரியமிக்கப் போராட்டங்களாலும், சூழலியல் அமைப்புகளின் கவலைகளாலும் மட்டுமே தள்ளிவைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்திட்டத்திற்காக பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை எனக் கூறி பிறப்பித்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசு தற்போது கால நீட்டிப்பு வழங்கியிருப்பது இப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுவது போல் அமைந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதல்வர் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சூழலியல் தாக்கங்களையும் மக்களின் நியாயமான அச்சங்களையும் உணர்ந்து, ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அணுக்கனிம சுரங்க ஒதுக்கீட்டு கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, குமரி மண்ணையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க தவெக அரசு முன்வர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
