சென்னை: நடப்பாண்டு பொறியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதியும் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களில் பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள், ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி ஜூன் 8ம் தேதி தொடங்கியது.
இந்த பணிகள் முடிந்து, வரும் ஜூன் 29ம் தேதி மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், நீட் தேர்வு குளறுபடி, சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு மறுமதிப்பீட்டு முடிவுகள் தாமதமானதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும் எனவும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அன்று அறிவிக்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் காலை 11 மணிக்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைபட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிடுகிறார்.
தொடர்ந்து கலந்தாய்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட உள்ளது. வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றை சரி செய்வதற்கான குறைதீர்ப்பு காலம் 1.7.2026 முதல் 5.7.2026 வரை வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை நேரில் அணுகலாம்.
