×

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஐ.ஆர்.இ.எல் ஆலைக்கு அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு: தவெக அரசு அரசாணையால் மக்கள் அதிருப்தி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் இந்திய அரிய மணல் ஆலைக்கு ,அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான கால அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர் தாலுகாவுக்குட்பட்ட கீழ் மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய 5 முக்கிய கடலோரக் கிராமங்களில், சுமார் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் அணு தாதுமணல் (இல்மனைட், ருட்டைல், ஜிர்கான், மோனசைட்) வெட்டி எடுக்கும் நடவடிக்கைக்காக பூர்வாங்க பணிகளை மத்திய பொதுத்துறை நிறுவனமான ஐஆர்இஎல் தீவிரப்படுத்தியது.

இதற்கு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடலோர கிராம மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே இத்திட்டம் நாட்டின் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறி, இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்துவதிலிருந்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2025 ஜூலை மாதம் விலக்கு அளித்தது.

இதைதொடர்ந்து, இத்திட்டத்திற்கான இறுதி அனுமதியைப் பெறும் நோக்கில், ஐஆர்இஎல் நிறுவனம் கடந்த மார்ச் 26 அன்று, ஒன்றிய அரசிடம் புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், ஆண்டுக்கு 15 லட்சம் டன் அணு தாதுக்கள் வெட்டி எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அரியவகை கனிம வழித்தடங்கள் அமைக்கும் திட்டமும் இதற்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மீனவர்களின் எதிர்ப்பால் ஆரம்பக் கட்டத்திலேயே முடங்கியுள்ள வேளையில், தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஒன்றிய அரசுடன் இணக்கமான உறவு என்ற புதிய அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் இந்திய அரிய மணல் ஆலை அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான கால அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாது மணல் எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடங்களுக்கான காலாவதி தேதியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1957-ஆம் ஆண்டின் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிள்ளியூர் தாலுகாவில் உள்ள கீழ்மிடாலம்-ஏ, மிடாலம்-பி, இனயம்புத்தன்துறை, எழுதேசம்-ஏ, எழுதேசம்-பி, எழுதேசம்-சி, கொல்லங்கோடு-ஏ மற்றும் கொல்லங்கோடு-பி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட மொத்தம் 1144.06.18 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுசக்தி கனிமங்களை வெட்டியெடுக்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தின் கோரிக்கையையும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரின் பரிந்துரையையும் ஏற்று, இந்த சுரங்க ஒதுக்கீடு காலத்தை 10.06.2027 வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) சுன்சோங்கம் ஜடக் சிரு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல்கள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், இந்திய அணுசக்தித் துறை மற்றும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆகியோருக்குத் தகுந்த நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அனுமதி நீட்டிப்பின் மூலம் மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையின் உற்பத்திப் பணிகள் எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நீட்டிப்பு உத்தரவை தொடர்ந்து, கடற்கரை மணல் அணு கனிம சுரங்க திட்டத்தை செயல்படுத்துவதற்கான கடலோர ஒழுங்குமுறை அனுமதியைப் பெறும் முயற்சியை ஐஆர்இஎல் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு கிள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார கடலோர கிராம மக்களிடையே நீண்டகாலமாக எதிர்ப்பு நிலவி வருவதால், அரசின் புதிய நீட்டிப்பு உத்தரவு மீண்டும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* தவெக செயற்குழுவில் கண்டனமும்… தமிழ்நாடு அரசின் அனுமதியும்….
தவெக மாநில செயற்குழு கூட்டம் 3.11.2024ல் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 21வது தீர்மானமாக ‘இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையாகத் திகழும் கன்னியாகுமரி பகுதியில், அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டமானது தென் தமிழகத்தை பாழ்படுத்தும் மற்றுமொரு முயற்சியே என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. நமது மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகார மற்றும் நச்சுத் திட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் த.வெ.க உறுதியாக இருக்கும் என்றும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இத்தகைய திட்டங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சுரங்க பணிகளுக்கான அனுமதியை ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : IREL ,Killiyur, Kanyakumari district ,Thaweka government ,Nagercoil ,Union Government ,Indian Rare Sand ,Plant ,Manavalakurichi, Kanyakumari district ,Lower Midalam ,Midalam ,Killiyur taluka ,Kanyakumari ,
× RELATED முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்