×

தவெக கூட்டணியில் விசிகவா? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தவெக ஆட்சிக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறார்கள். 5 ஆண்டுகள் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே இடதுசாரிகள் விருப்பம். அதே நிலைப்பாட்டைதான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் முன்னெடுக்கிறது. தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில், புதிய கூட்டணி அறிவிப்பு என்பது அங்கு பேசும்போது தான் தெரியும். நான் எப்படி சொல்ல முடியும்.

அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது ஏன் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது அதிமுகவில் நடக்கும் மிக முக்கியமான பிரச்னை. தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவு செய்ய வேண்டும் என கூறிய போது, கடுமையான எதிர்ப்பு வந்தது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது.

சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்த கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். அதை தொடர வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள். அமைச்சர் சரத்குமார் மீதான போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு என்பது கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான். இவ்வாறு தெரிவித்தார். பின்னர், மேலவளவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசுகையில், ‘‘திருமாவளவன் தவெகவிற்கு அழுத்தம் கொடுப்பதாக சிலர் பேசுகிறார்கள்.

சமூகநீதி துறை இல்லாமல் வேறு துறை கேட்பதாக சிலர் பேசி வருகின்றனர். இடைத்தேர்தலிலோ அல்லது அமைச்சரவையிலோ நான் பங்கேற்க மாட்டேன் என எப்போதோ முடிவெடுத்து தெரிவித்துள்ளேன். விவசாய கடன் தள்ளுபடி முறையாக செய்யாததால் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டம் வெல்லும்’’ என்றார்.

Tags : Thaweka ,Thirumavalavan ,Madurai ,Viduthalai Siruthaigal Party ,Left ,Thaweka government ,Viduthalai Chiruthaigal party ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில்...