×

ஜோடி போட்டு பெண் அமைச்சர்கள் செல்பி: சண்டைக்கு திடீர் ரியாக் ஷன்

 

சிவகாசி: தவெக அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் கோஷ்டி மோதலுக்கு இடையே, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக செல்பி படத்தை போட்டு திடீர் ரியாக்‌ஷன் காட்டி உள்ளனர். தவெக அரசில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. இவரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா ஒரு கோஷ்டியாகவும், அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் இரண்டு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் மோதுவது அடிக்கடி நடந்து வருகிறது. இரண்டு பெண் அமைச்சர்களின் மோதல் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருவது தவெக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இருவரையும் கட்சி தலைமை அழைத்து, ‘‘ஏற்கனவே மின்வெட்டு, அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றால் அரசு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி திணறி வருகிறது. கோஷ்டி மோதலெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒற்றுமையாக செயல்படுங்கள். இல்லாவிட்டால் பதவியை இழக்க நேரிடும்’’ என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, கீர்த்தனா கலந்து கொண்டனர். அப்போது இருவரும் சிரிப்பதுபோல் ஒன்றாக செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, ‘‘அடுத்த கட்டுக்கதையிலாவது அதிர்ஷ்டம் கைகூடட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதே புகைப்படத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ‘‘கட்டுக்கதைகளை ஒற்றை புன்னகையால் உடைத்தெறிவோம்’’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. இதை பார்த்த தமிழக அரசியல் கட்சியினர் குழம்பி போயுள்ளனர். ஆனால் விபரம் அறிந்த விருதுநகர் மாவட்ட மக்கள், இது ரொம்ப நாள் நீடிக்காது என்று கிண்டலடிக்கின்றனர்.

Tags : Sivakasi ,Thaveka ,Keerthana ,Jagatheeswari ,Thaveka government ,Industries Minister ,Social Welfare ,
× RELATED தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை