திருப்பூர்: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் அழகிகள் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூரில் ரோட்டரி சார்பில் பாசரை என்ற நிகழ்ச்சி கடந்த 27, 28 ஆகிய நாட்கள் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஏவிபி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் தவெக எம்எல்ஏக்கள் சத்தியபாமா, பாலமுருகன், கவிஞர் வைரமுத்து, நடிகை நமிதா, பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
2 நாட்கள் நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட முக்கிய விஐபிக்களுக்கு தவெக நிர்வாகி நீதிராஜன் என்பவருக்கு சொந்தமான சொர்க்கம் பார்ட்டி அரங்கில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் இரவு மது விருந்துடன் கூடிய அழகிகளின் அரை நிர்வாண நடன நிகழ்ச்சியை தவெக நிர்வாகி நீதிராஜனுக்கு சொந்தமான சொர்க்கம் பார்ட்டி ஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகளை அழைத்து வந்து அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம் போட வைத்தனர். அதனை பார்த்த விஐபிக்கள் சிலரும் அந்த அழகிகளுடன் சேர்ந்து நடனமாடினர். இந்த நடனங்களை ஒருவர் பேஸ்புக் மூலம் நேரலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த 15.வேலம்பாளையம் போலீசார் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு சென்று அரைகுறை ஆடைகளோடு குத்தாட்டம் போட்ட அழகிகளை தடுத்து நிறுத்தினர். ரோட்டரி நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டும் இருக்கும் இடத்தில் அழகிகளை அரைகுறை ஆடைகளுடன் நடனமாட வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக பல்வேறு பார்களை நடத்தி வருபவரும், சொர்க்கம் பார்ட்டி அரங்கு உரிமையாளரான தவெகவை சேர்ந்த நீதிராஜன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
