பாலக்காடு, ஜூன் 29: பாலக்காட்டில் மாவட்ட அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மாவட்ட தாய் சேய் மருத்துவமனை மாநாட்டு அரங்கில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சரிதா தலைமை வகித்தார். குழந்தைகளுக்கு எம்எல்ஏ ரமேஷ் பிஷாரடி போலியோ சொட்டு மருந்துகள் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் என 1850 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
மாவட்டத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 226 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் விதமாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மருத்துவ அதிகாரி டாக்டர் ரோஸ், பாலக்காடு நகராட்சி சுகாதாரம் செயற்குழு தலைவர் மீனாட்சி, சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் ரீத்தா, ஒருங்கிணைப்பாளர் அஜய், கல்வி அதிகாரி சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
