சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக அரசு கூறினாலும், மது விற்பனை குறையவில்லை. எனவே, பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரப்போகிறீர்கள் என்பதற்கான கால நிர்ணயத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும். செய்தி வெளியே வருகின்ற போதே ஏழு பேர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் செய்திகள் வந்தது. ஆனால் தமிழ்நாட்டினுடைய பல அமைச்சர்கள் இரண்டு பேர் ரெண்டு பேர் என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதெல்லாம் தவறானது. உயிரிழந்தவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் என்பதால், அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதியுதவி போதாது.
அவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் மது, போதையைவிட மோசமான புதிய கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது மக்கள் தீர்ப்பிற்குச் செய்யும் துரோகம். தமிழகத்தின் அரசியல் இப்போது உலகளவில் கேலிக்கூத்தாக்கியுள்ளது. தவெக அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என ஆய்வு செய்து, பயன்படுத்தியிருந்தால் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவில் இருந்தவர்கள் நிறைய வெளியே போகிறார்கள். திமுக, அதிமுக கூட்டணியில் இருந்தவர்களும் வெளியே போகிறார்கள். தமிழக அரசியலில் யாரும் கொள்கை கோட்பாட்டுடன் இல்லை. ஆதாயத்திற்காக மட்டும்தான் கட்சியில் நீடித்தார்கள் என்பது தெரிகிறது. பதவி இல்லை என்றால் உயிரா போகப்போகிறது? கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இது குறித்து நீதிமன்றத்தை நாடுவோம்.
தமிழ்நாட்டு அரசியலுக்கு தொடர்பில்லாத ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பது மிகவும் தவறானது. தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும். அதற்கு முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சரை அணுக வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சோசியல் மீடியா மற்றும் தனிப்பட்ட நபர்களின் ஆதிக்கம் அரசு நிர்வாகத்தில் இருப்பதை ஏற்க முடியாது.
அரசு நிர்வாகம் அனைவரும் அணுகக்கூடிய வகையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். தமது கட்சி சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடும் அமைப்பாகச் செயல்படுகிறது. வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஜூலை 4ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
