பாடகர் உதவித்தொகையில் ரூ.1,200 கோடி ஊழல்: மேற்குவங்க பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நாட்டுப்புறக் கலைகளையும், கீர்த்தனை கலைஞர்களையும் (பாடகர்கள்) ஊக்குவிக்கும் வகையில் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான கலைஞர்களுக்கு ஆரம்பத்தில் மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அரசு சார்ந்த மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், இந்த நிதியுதவித் தொகை மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக, அதாவது இந்த ஆண்டு வரை இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் மாநில அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான கலைஞர்கள் பயனடைந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ ருத்ரனில் கோஷ் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், ‘மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 5 லட்சம் கீர்த்தனை கலைஞர்களில், சுமார் 2.5 லட்சம் பேர் போலியானவர்கள். அதாவது 50 சதவீத பயனாளிகள் போலியாகச் சேர்க்கப்பட்டு, அரசு நிதியைச் சுரண்டியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்த போலி கலைஞர்கள் மூலம் சுமார் 1,200 கோடி ரூபாய் பொதுப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

உண்மையான கலைஞர்கள் வறுமையில் வாடும் நிலையில், அப்போதைய திரிணாமுல் கட்சி தொண்டர்கள் பலன் பெற்றுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி தகுதியற்ற பயனாளிகளை நீக்க வேண்டும்’ என்றார். இதனை அகில இந்திய கீர்த்தனை மற்றும் பவுல் கலைஞர்கள் நல வாரியமும் உறுதி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: