இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான பிசிஎம் தகுதி அரசாணை ரத்து; தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்ட அறிக்கை:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ (பிசிஎம்) சான்றிதழும், அதன்படியான இடஒதுக்கீடு பலன்களும் வழங்க வழிவகை செய்து, கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2024ம் ஆண்டு அரசாணை எண் 31-ஐ, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூக, கல்விப் பின்தங்கிய நிலையைப் போக்குவதுதான் என்பதைத் தாண்டி, மதக் கோட்பாடுகளை மட்டுமே பிரதானமாக வைத்து நீதிமன்றம் இந்த விவகாரத்தை அணுகியுள்ளது. இது, நீதிமன்றம் சமூக நீதிக் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறியதையே காட்டுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு, சமூக நீதியைக் காக்கும் பொருட்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும், அரசாணை எண் 31ன் சட்டப்பூர்வ தன்மையையும் நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: