பாஸ்டன்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் ஐ பிரிவு லீக் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை பந்தாடிய பிரான்ஸ் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், பிரான்ஸ் அணி வீரர் உஸ்மான் டெம்பெலே ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார். அவர் 7வது, 20வது மற்றும் 32வது நிமிடத்தில் கோல் அடிக்க, டிசையர் துவே கடைசி தருணத்தில் கோல் போட்டார் (90’+4’). நார்வே தரப்பில் தெலோ ஆஸ்கார்ட் 21வது நிமிடத்தில் ஒரு ஆறுதல் கோல் அடித்தார்.
பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே கோல் ஏதும் அடிக்காவிட்டாலும், ஜெர்மனியின் குளோஸ் சாதனையை (16 கோல், 4 அசிஸ்ட்) சமன் செய்தார். உலக கோப்பையில் கோல் மற்றும் சக வீரர்கள் கோல் அடிக்க உதவிய வகையில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி (18 கோல், 8 அசிஸ்ட்) முதலிடம் வகிக்கிறார். குளோஸ், எம்பாப்பே 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிரான்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் நார்வே நட்சத்திரம் ஹாலண்ட் களமிறக்கப்படவில்லை. ஐ பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த பிரான்ஸ் (9), நார்வே (6), செனகல் (3) அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஈராக் ஹாட்ரிக் தோல்வியுடன் வெளியேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் ஈராக் அணியுடன் மோதிய செனகல் 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

* ஈரான் ஏமாற்றம்
சியாட்டில் அரங்கில் ஈரான்-எகிப்து மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. எகிப்து தரப்பில் முகமது சேபர் 5வது நிமிடத்திலும், ஈரான் சார்பில் ரமின் ரெஸையன் 14வது நிமிடத்திலும் கோல் போட்டனர். ஈரான் கடைசி நிமிடங்களில் (90’+5’) அடித்த ஒரு கோல் விஏஆர் மூலம் ஆப் சைடு ஆக அறிவிக்கப்பட்டது அந்த அணி வீரர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அந்த கோல் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஈரான் அடுத்த சுற்றுக்கு உறுதியாக முன்னேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே ஹாட்ரிக் டிரா கண்டதே ஈரான் அணிக்கு மிகப் பெரிய சாதனைதான். சிறந்த 3வது இடம் பிடித்த அணியாக ஈரானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
* நியூசி.யை பந்தாடிய பெல்ஜியம்
வான்கூவரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை மிக எளிதாக வீழ்த்தியது. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் அணிக்கு லியாண்ட்ரோ ட்ரோஸார்ட் (28’ மற்றும் 50’), கெவின் டி புருய்ன் (66’), ரோமெலு லூகாகு (86’) அலெக்சிஸ் (90’+4’) ஆகியோர் கோல் அடித்தனர்.
நியூசி. அணிக்கு 84வது நிமிடத்தில் எலியா ஜஸ்ட் ஒரு கோல் போட்டார். ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் தலா 5 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஈரான் (3), நியூசிலாந்து (1) வெளியேறின.
* 3 டிராவுடன் முன்னேற்றம்!
ஹூஸ்டன் அரங்கில் கபோ வெர்டே-சவுதி அரேபியா மோதிய எச் பிரிவு லீக் ஆட்டம் 0-0 என கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில் டிராவில் முடிந்தது. எச் பிரிவில் கற்றுக்குட்டி அணியான கபோ வெர்டே ஹாட்ரிக் டிராவுடன் 3 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. இந்த பிரிவில் ஸ்பெயின் (7) முதலிடம் பிடித்த நிலையில், உருகுவே (2), சவுதி அரேபியா (2) வெளியேறின.
