×

அயர்லாந்துடன் இன்று 2வது டி20; உலக சாம்பியன் இந்தியாவுக்கு நெருக்கடி: வன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

பெல்பாஸ்ட்:: இந்தியா அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, பெல்பாஸ்டில் இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20ல் நடப்பு உலக சாம்பியனான இந்தியா, பெல்பாஸ்ட் சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 34 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

183 ரன் என்ற இலக்கை துரத்திய இந்தியா, 18.5 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபிஷேக் 49, திலக் 19, ஷிவம் துபே 25, அக்சர் 15 ரன் எடுக்க, கேப்டன் ஷ்ரேயாஸ் உள்பட மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். அயர்லாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடக்கிறது. தொடர்ச்சியாக 12 டி20 தொடர்களில் வெற்றி என்ற இந்திய அணியின் சாதனைப் பயணத்தை கற்றுக்குட்டியான அயர்லாந்து தடுத்து நிறுத்திய நிலையில், தொடர்ச்சியாக 16 தொடர்களில் தோல்வியை சந்திக்காத அணி என்ற இந்தியாவின் சாதனையும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2வது போட்டியில் பதிலடி கொடுத்து 1-1 என தொடரை சமன் செய்தால் மட்டுமே அது நிலைக்கும் என்பதால் ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி கடும் நெருக்கடியுடனே களமிறங்குகிறது. உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி இந்த போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்க அயர்லாந்தும், உலக சாம்பியனுக்கான கவுரவத்தை காப்பாற்ற இந்தியாவும் வரிந்துகட்டுவதால் போட்டி கடுமையாக, சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags : 2nd T20I ,Ireland ,India ,Vanshi ,Belfast ,T20I ,T20Is ,
× RELATED ஈராக்கிற்கு எதிராக செனகல் கோல்மழை: 5-0 என அசத்தல் வெற்றி