பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் சீகேஹள்ளி பகுதியில் உள்ள சாய் கிரீன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முத்துலட்சுமி (48) மற்றும் அவரது இளைய மகள் சுப்ரியா (19) ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது வீட்டில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களுடன் வசித்து வந்த முத்துலட்சுமியின் கணவர் சோமசுந்தர் (52), தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த நிலையில், குடியிருப்பின் பிரதான வாசல் அருகே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், மூத்த மகள் ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகியோரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், ஸ்வேதாவுக்கும் கென்னத்துக்கும் இடையிலான காதல் விவகாரத்தில் தாய் முத்துலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவரை மட்டும் கொலை செய்ய ஸ்வேதா திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று முத்துலட்சுமியை மட்டும் தனியாகக் கொன்றுவிட்டு, சடலத்தை அப்புறப்படுத்த புதிய சூட்கேஸ்களுடன் ஸ்வேதாவும் கென்னத்தும் எச்.ஏ.எல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி முத்துலட்சுமியின் உடலை மறைப்பதற்கு முன்பாகவே, தந்தை சோமசுந்தரும் தங்கை சுப்ரியாவும் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்துவிட்டனர். இதனால் தங்களின் கொலைத் திட்டம் தெரிந்துவிடும் என்ற பயத்தில், அவர்கள் இருவரையும் ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகிய இருவரும் சேர்ந்து சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘காதல் விவகாரத்தில் தாயுடன் ஏற்பட்ட தகராறே இந்த விபரீத முடிவுக்குக் காரணம்; முதலில் தாயை மட்டுமே கொல்லத் திட்டமிட்ட நிலையில், மற்ற இருவரும் இடையில் வந்ததால் அவர்களையும் கொன்றுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.
