தி.நகரில் நள்ளிரவு பரபரப்பு; 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்து படுகொலை: ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

 

சென்னை: தி.நகர் பகுதியில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடுத்தடுத்து சில மணி நேரத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). இவர் தி.நகர் பகுதியில் உள்ள விஜயா மஹாலில் துப்புரவு பணியாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று மாலை 6 மணிக்கு வேலை முடிந்து ெசன்றார். பின்னர் இரவு 9.30 மணி அளவில் தி.நகர் தியாகராயர் சாலையில் உள்ள பிரபல வாட்ச் விற்பனை நிலையம் முன்பு தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதியில் சென்ற மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாம்பலம் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையிலான போலீசார் நேரில் வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் மயங்கி கிடந்த ராஜேந்திரனை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதைதொடர்ந்து, போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து விசாரணை நடத்திய போது, தேனாம்பேட்டை கங்கைகரைபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி(34) என்ற ஆட்டோ டிரைவர் துப்புரவு தொழிலாளி ராஜேந்திரனை அடித்து படுகொலை செய்தது தெரியவந்தது.

உடனே ராஜேந்திரன் மனைவி கோகிலா(46) மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்திய போது, துப்புரவு தொழிலாளி ராஜேந்திரன் வேலை முடிந்து பாண்டி பஜார் பாபா டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, எதிரே மது அருந்தி கொண்டிருந்த பாலாஜி மது போதையில் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, போதையில் இருந்த ராஜேந்திரனை டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்ததும் பின் தொடர்ந்து வழிமறித்து அடித்து கொன்றது தெரியவந்தது.

அதேபோல், தி.நகர் தியாகராய சாலையில் உள்ள விஜயா மஹால் பின்புறம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் குன்றாம் கிராமத்தை சேர்ந்த ரவிகுமார்(46) என்பவர் கடந்த 6 மாதமாக தங்கி திருமண மண்டபத்தில் துப்புரவு பணி ெசய்ய ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்கும் பணியை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று இரவு வேலை முடிந்ததும், விஜயா மஹாலில் உள்ள பார்க்கிங் பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் படி மாம்பலம் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையிலான போலீசார் நேரில் வந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ரவிக்குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரவிகுமார் இறந்துவிட்டார்.

இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயா மஹாலில் உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை நடத்திய போது, ரவிகுமார் திருமண மண்டபத்தில் வேலை வாங்கும் போது, துப்புரவு தொழிலாளர்களான மணி(எ) சொர்ணகுமாரை கடுமையாக ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி(எ)சொர்ணகுமார் வேலை வாங்கிய ரவிகுமாரை கட்டையால் பார்க்ங் பகுதியில் அடித்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த மணி(எ)சொர்ணகுமார்(65) கைது செய்தனர். அவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. தி.நகர் பகுதியில் பிரபல திருமணம் மண்டபம் அருகே அடுத்தடுத்து சில மணி நேரத்தில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: