கோவை: கோவையில் காட்டுக்குள் நிர்வாண நிலையில் அழுகிய பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மேற்கு புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் மஞ்சுப்பள்ளம் ஓடை காட்டுப்பகுதி உள்ளது. இங்கு நேற்று பெண் ஒருவர், நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அங்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர் ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், குனியமுத்தூர் போலீஸ் எஸ்ஐ தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்தார். தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள தடயங்களை சேகரித்து புகைப்படங்களை பதிவு செய்தனர். அங்கிருந்து ஒரு ஜோடி செருப்பு மீட்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடம் மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என தெரிகிறது. உடல் அழுகி உப்பிய நிலையில் இருந்ததால் காயங்கள் உள்ளதா? என அடையாளம் காண முடியவில்லை.
பெண்ணின் கையில் ஜெகன் என்றும் எஸ் மற்றும் ஜே என பச்சை குத்தப்பட்டுள்ளது. யாரோ? பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தான் முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். கோவை சூலூரில் கடந்த மாதம் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் நிர்வாண நிலையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டிருப்பது கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
* பட்டியல் சேகரிப்பு
கோவையில் கடந்த சில நாட்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். காவல் நிலையங்களில் மிஸ்சிங் ஆன பட்டியலை ஆய்வு செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
* போலீசார் அலட்சியம்
சம்பவம் நடந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பைபாஸ் சாலை பகுதி என்பதால் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து வந்து அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இந்த பகுதியில் அடிக்கடி இரவு நேரத்தில் வாகனங்களில் இளம்பெண்களை அழைத்து வந்து காட்டுக்குள் ஜாலியாக இருப்பது வாடிக்கையாக நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
* பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (30). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் பிளஸ் 1 மாணவி ஒருவரை அழைத்து சென்று திண்பண்டங்கள் வாங்கி தந்துள்ளார். பின்னர் சிறுமியிடம் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கலாம் எனக் கூறி நட்சத்திர ஏரிக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு சுற்றி பார்த்துவிட்டு சிட்டி வியூ பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என சிறுமியை மிரட்டி, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி அழுதபடி இருந்துள்ளார். இதை பார்த்த தாயார் கேட்க, சிறுமி நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று அருள்பிரகாசை கைது செய்தனர்.
* இளம்பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற 60 வயது யோகா ஆசிரியர்
கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூரில் உள்ள வாடகை வீட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த அருணன் (60) தனது மனைவி பிரியாவுடன் வசித்து வருகிறார். இன்சூரன்ஸ் ஏஜெண்டான அருணன், யோகா ஆசிரியராகவும் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் தேனியை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது தோழிகள் 5 பேருடன் வசித்து வருகிறார். இளம்பெண்கள் தனியார் நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்து வருகிறார்கள்.
6 இளம் பெண்களுக்கும் அருணன் வீட்டில் மாத மாதம் பணம் செலுத்தி சாப்பிட்டு வந்தனர். நேற்று 5 இளம்பெண்கள் வேலைக்கு சென்றிருந்த நிலையில் 22 வயது இளம்பெண் மட்டும் அருணன் வீட்டில் நேற்று காலை சாப்பிட வந்தார். அருணனின் மனைவி பிரியா உடல் நலம் சரியில்லாமல் தனி அறையில் ஓய்வெடுத்தார். இளம்பெண் சாப்பிட்ட பின்னர் பிளேட்டை சுத்தம் செய்ய முயன்றார்.
அப்போது, திடீரென அருணன் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அருணனுக்கு தர்ம அடி கொடுத்து இளம்பெண்ணை போராடி மீட்டனர். இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
