ஜெயங்கொண்டம், ஜூன் 26: ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செந்துறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். போதை ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபகேசன் உறுதிமொழி வாசிக்க 22 ஆசிரியர்கள் 624 மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பிற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடைபெற்று போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை செந்துறை இன்ஸ்பெக்டர் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவர்களை பாராட்டி பரிசு பொருட்கள் வழங்கினர். பின்னர் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை செந்துறை இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியே போதை ஒழிப்பிற்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் கோஷமிட்டு சென்றனர். பேரணியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
