கோவை, ஜூன் 25: தமிழகத்தில் பட்டா நிலங்கள், பொது இடங்களில் அபாயகரமாக உள்ள மரங்கள், கட்டுமான பணிக்காக வெட்ட வேண்டிய மரங்கள் அகற்ற வனத்துறையின் அனுமதி பெறவேண்டியுள்ளது. மாநில அளவில் பொதுமக்கள் தமிழக வனத்துறையின் இணைய தளத்தில் விண்ணப்பித்து மரம் வெட்ட அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் மரங்கள் வெட்ட 3104 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இவற்றில் 1798 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1306 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. 30 நாட்கள் வரை அனுமதி வழங்க கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 50 முதல் 60 நாட்கள் ஆனாலும் வனத்துறையினர் அனுமதி கிடைக்காமல் விண்ணப்ப தாரர்கள் தவித்து வருகின்றனர். அனுமதி கிடைக்காமல் தாங்களே மரங்களை அகற்றினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே வனத்துறையினர் வந்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. மழை காலத்தில் மரங்கள் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தால் பாதிப்பு அதிகமாகி விடும். எனவே வனத்துழையினர் ஆன்லைன் போர்ட்டலில் உள்ள பதிவுகளை விரைவாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அளவில் 1016 விண்ணப்பங்கள் தொடர்பாக மட்டுமே உரிய கால அவகாசத்தில் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மரங்கள் வெட்ட 167 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 84 விண்ணப்பங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 83 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதால் மக்கள் தவிப்படைந்துள்ளனர்.
