தரிசு நிலங்களை வளமாக்கி, அதிபசுமை ஆக்கிடும்
வாய்ப்புள்ள இடங்களில் வளர்க்க அரசு முயலுமா?
எதிர்பார்ப்பில் சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்கள்
காடுகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் சுற்றுச்சுழலை காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. காடுகளை அழித்து, நகரங்களை உருவாக்கியதன் விளைவாக பலவிதமான சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். மரங்களை வளர்ப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளோம். ஜப்பானை சோ்ந்த யோகோஹாமா பல்கலையை சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ ஒரு காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார். இது ‘மியாவாக்கி காடுகள்’ என அழைக்கப்படுகிறது. இடைவெளி இல்லாத அடா்காடு என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டது இது. தமிழில் ‘அடர் குறுங்காடு’ என இதனை அழைக்கலாம்.
அகிரா மியாவாக்கி தனது ஆராய்ச்சிகளின்போது ஜப்பான் காடுகளில் அந்நாட்டின் இயல் (native) மரங்கள் குறைந்தும், அயல் (invasive) மரங்கள் நிறைந்தும் இருப்பதை பற்றி ஆராய்ந்தார், அதற்கு மாற்றாக, முழுவதும் உள்நாட்டு மரங்களை கொண்ட காடுகளை விரைந்து வளர்ப்பதற்கான முறைகளை ஆராய்ந்து வந்தார். அவ்வாறு அவரது ஆராய்ச்சியில் உருவானதே இந்த மியாவாக்கி காடு வளர்ப்பு முறை. இது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் மண் வளம், காலநிலை, பருவ மாற்றங்கள் என அனைத்தையும் சார்ந்து தனித்துவமாக உருவாக்கப்படும் மரம் வளர்ப்பு முறை.
மியாவாக்கி காட்டை உருவாக்க, நாம் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். பொதுவாக 600 சதுர அடி குறுங்காடு உருவாக்க, ரூ.50,000க்கும் மேல் செலவு ஆகும். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மியாவாக்கி காட்டை உருவாக்க சென்னை மாநகராட்சி ரூ.15 லட்சம் செலவு செய்ததாம்.
மியாவாக்கி முறையில் குறைவான இடப்பரப்பில், குறுகிய காலத்தில், அதிவிரைவாக, அடர்த்தியான காடுகளை உருவாக்கிடமுடியும் என்பதே இதன் தனித்துவம். சாதாரணமாக ஒரு காடு உருவாவதற்கு 200 முதல் 300 ஆண்டுகள் வரை ஆகின்றன. ஆனால் மியாவாக்கி முறையில் அடர் குறுங்காடுகளை 15 முதல் 30 ஆண்டுகால அளவில் உருவாக்கிட முடியும்.
குறைவான நிலப்பரப்பில் ஆழமான குழியை தோண்டி, அதற்குள் மக்கும் குப்பைகளை கொட்டி நெருக்கமாகவும், அதிக எண்ணிக்கையிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 100 சதுர அடி பரப்பளவில் 30 முதல் 40 மரக்கன்றுகளை நட முடியும். சிறிய நிலப்பரப்புகளில் நகரத்தின் பல இடங்களில் ஆங்காங்கே இத்தகைய அடர் காடுகள் வளர்க்கப்படுவதால் பூமியின் வெப்பமானது வெகுவாக குறைகிறது. காற்றில் போதிய அளவு ஈரப்பதம் நிலவுகிறது. பறவைகளும், பூச்சிகளும் இயற்கையாக வாழும் சூழ்நிலை உருவாகிறது. மரங்களில் இருந்து வெளியாகும் உயிர்வளி மூலம் மாசு குறைந்து, நல்ல சுத்தமான காற்று நமக்கு கிடைக்கிறது. மியாவாக்கி காடுகள் சுற்றுச்சூழலை தூய்மையாக்கி, சுகாதாரமாக வாழும் நிலையை உருவாக்கி, நமக்கு பெரும் நன்மை விளைவிக்கின்றன.
உங்களிடம் சுமார் 500 சதுர அடி இடம் இருந்தால்கூட, அதில் இந்த முறையில் நீங்கள் காடுகளை வளர்க்கலாம். இதில் மரக்கன்றுகளை நெருக்கமாக நடுவதின் மூலம் அவற்றுக்கு சூரிய ஒளி மேலிருந்து மட்டுமே கிடைக்கும். பக்கவாட்டில் மற்ற செடிகள் நெருக்குவதால், ஒளிச்சேர்க்கைக்காக மரங்கள் சூரிய ஒளியை தேடி ஒன்றுக்கொன்று போட்டிபோட்டு மேல்நோக்கி வேகமாக வளரும். இதனால் 10 ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும். பொதுவாக இந்த முறையில் மரங்கள், இயற்கை காடுகளைவிட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.
ஓராண்டுக்கு ஒரு மீட்டர் வரை இந்த காடுகள் வளர்வதை பார்க்க முடியும். இதில் முக்கியமாக முதல் 2 ஆண்டுகளுக்கு நன்றாக பராமரிக்க வேண்டும். விதைத்த அல்லது நடப்பட்ட ஒவ்வொரு செடியும் வளர்ந்து செழிக்க வேண்டும் என்ற நோக்குடன் இவை செய்யப்படுகின்றன. 3 ஆண்டுகளுக்கு பிறகு பராமரிப்பின்றி தானாகவே வளரும். அதற்கு பிறகு இந்த காடுகள் தன்னிறைவு பெற்று அதன் சூழல் அமைப்பை தானே நிலைப்படுத்தும் தன்மையை அடைந்துவிடும். மியாவாக்கி காடுகள் முதலில் ஜப்பானில் காணப்பட்டாலும், 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது. ஜப்பானில் மட்டும் 4,000க்கும் மேற்பட்ட மியாவாக்கி காடுகள் உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்த காடுகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் சமீபகாலமாக பல பெருநகரங்களில் இதுபோன்ற காடுகளை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு, ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களில் இவை தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய மியாவாக்கி காடு குஜராத்தில் தெற்கு கடற்கரை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. மியாவாக்கி அடர் வனங்கள் ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரழிவுகளில் இருந்து மிகச்சிறந்த தடுப்பு அரணாக திகழ்கிறது. பல இடங்களில் சுனாமி தடுப்பு அரணாகவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
மலைப்பிரதேசங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, காடுகளை இழந்த இடங்களில், இந்த முறை மூலம் காடுகளை உருவாக்குவது, பெரும் வெள்ளங்கள் மற்றும் நிலச்சரிவுகளை தடுக்க உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த காடுகள் பல்லுயிர் பெருக்கத்துக்கு வழி செய்கின்றன. தரிசு நிலங்களை இந்த காடுகள் சில ஆண்டுகளிலேயே செழிப்பான மண்ணாக மாற்றுகின்றன. மேலும் பெரு நகரங்களில் இத்தகைய அடர்வன மரங்களின் கீழ் வெப்ப அளவு சுமார் 5 டிகிரி வரை குறைவதாக கூறப்படுகிறது. பெருநகரங்களில் பசுமை போர்வையை பல மடங்கு உயர்த்துகிறது. நகர்ப்புறங்களில் நடுவே இத்தகைய பசுமையான காடுகளினால் மக்களின் உடல்நலத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களின் மன அழுத்தம் குறைய இத்தகைய காடுகள் உதவுகின்றன.
இன்றைய காலத்தில் பெருநகரங்களில் முக்கிய பிரச்னையான காற்று மாசுபாட்டை இந்த வகை அடர் குறுங்காடுகள் குறைக்கின்றன. காடு அழிப்பினால் நாம் இழந்த பசுமை பிரதேசங்களை, இத்தகைய குறுங்காடுகளின் மூலம் மீண்டும் உருவாக்கம் செய்ய முடியும். வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக இத்தகைய காடுகளை ஏற்படுத்தலாம். மியாவாக்கி காடுகள் என்பது நவீன யுகத்தின் ஒரு உன்னத கண்டுபிடிப்பு. ஆனாலும், இந்த மியாவாக்கி முறையினால் இயற்கை காடுகளை ஈடுசெய்ய முடியாது. இயற்கை பல நூற்றாண்டுகளாக செதுக்கி ஏற்படுத்திய காடுகளை, இங்கே நாம் சில ஆண்டுகளில் உருவாக்க முயல்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இயற்கை காடுகளில் நம் கற்பனைக்கு எட்டாத அளவில் செடிகள், மூலிகைகள், மரங்கள் உள்ளன. இவை அனைத்தையும் மியாவாக்கி காடுகள் மூலம் பெற முடியா. இயற்கை காடுகளில் சதுப்பு நில, வெப்ப மண்டல, மழைக்காடுகள் என பலவகைகள் உள்ளன. இவற்றை மியாவாக்கியால் உருவாக்கம் செய்ய முடியாது. இயற்கை காடுகள் அமைந்துள்ள இடம் மற்றும் அவற்றின் சுற்றுவட்டார பகுதிகளின் மழை அளவு, தட்பவெப்பம் போன்றவற்றில் இவற்றின் பங்களிப்பு அதிகம் இருக்கும். ஆனால் இந்த அடர் குறுங்காடுகளினால் மழைப்பொழிவை ஏற்படுத்தும் அளவிற்கு தாக்கம் இருக்குமா என்றால், சந்தேகம்தான். இவை பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுத்தாலும், வன விலங்குகளின் கூடாரமாக என்றுமே மாறா.
இயற்கையான காடுகள் வலுவான உணவு சங்கிலி மற்றும் நுட்பமான சூழல் அமைப்புகளை கொண்டவை; சிறந்த கார்பன் வங்கி. மியாவாக்கி காடுகள் மறைமுகமாக வியாபார நோக்கோடு செய்யப்படும் காடு அழிப்பை ஊக்கப்படுத்தக்கூடும். இயற்கையின் கொடைகளான காடுகள், மண் முதல் முதிர்ந்த மரங்கள் வரை, மண்புழு முதல் பறவை வரை, தவளை முதல் யானை வரை, குட்டை முதல் நதிகள் வரை, விஷச்செடிகள் முதல் அற்புதமான மூலிகைகள் வரை என பல்வேறு நிலைகளில் பல்லுயிர் பெருக்கத்தை கொண்டுள்ளன. அமேசான், போர்னியோ போன்ற பல காடுகளுக்கு என தனி சுற்றுச்சூழல் அமைப்பே காலப்போக்கில் உருவாகி, தனி உலகமே அவற்றுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.
மனிதனுக்கும், காடுகளுக்கும் இடையே இருந்த பந்தம் மிகப்பெரியது. நம் மூதாதையரை தங்களது வளங்களின் மூலம் வாழ வைத்தவை இயற்கை காடுகள்தாம். ஒருபக்கம் இத்தகைய குறுங்காடுகள் நிறைய பெருகும் அதே நேரத்தில், மறுபுறம் இயற்கை காடுகள் வரலாறு காணாத அளவிற்கு வேகமாக அழிந்து வருகின்றன. எனவே மியாவாகி குறுங்காடுகள், இயற்கை வனங்களுக்கு மாற்றாக அமையாமல், அவற்றிற்கு துணையாய் உருவாக்கப்பட வேண்டும். இந்த குறுங்காடுகளை நகருக்குள் கிடைக்கும் சிறு இடங்களில் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், உண்மையான காடுகளை வளர்க்கவும், பாதுகாக்கவும் இதே ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான முயற்சிகளை மேலும் தீவிரமாக தொடர வேண்டும். இயற்கை காடுகளின் அழிப்பை தடுக்க வேண்டும்.
பல அடுக்கு தாவர வளர்ப்பு
பல அடுக்கு தாவர வளர்ப்பு என்பது ஒரே நிலப்பரப்பில், வெவ்வேறு உயரங்களில் வளரும் மரங்கள், செடிகள் மற்றும் கொடிகளை இயற்கையான காட்டு சூழலைப்போல் ஒன்றிணைத்து வளர்க்கும் முறையாகும். இது நிலத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, மண்ணின் வளத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த முறை வெப்பமயமாதலை கட்டுப்படுத்தவும், கரியமில வாயுவை உறிஞ்சவும் மிகவும் உதவுகிறது. வெவ்வேறு உயரங்களில் வளரும் தாவரங்கள் அதிக அளவில் கரியமில வாயுவை காற்றில் இருந்து உறிஞ்சி, மண்ணில் கார்பனை சேமிக்கின்றன. மரங்களின் அடர்ந்த இலைகள் நிழலை தருவதோடு, நீராவிப்போக்கு மூலம் சுற்றுப்புற வெப்பநிலையை கணிசமாக குறைக்கின்றன.
புற்கள் மற்றும் புதர்கள் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, மண்ணரிப்பையும் தடுக்கின்றன. தாவரங்களின் வேர்கள் பூமிக்குள் தண்ணீரை சேமிக்க உதவுகின்றன. பறவைகள், பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு இது ஒரு சிறந்த வாழ்விடத்தை உருவாக்குகிறது. முதல் அடுக்கில் தேக்கு, மா, பலா போன்ற உயரமான மரங்களை வெளிப்பகுதியிலும், சூரிய ஒளி தேவைக்கேற்பவும் நடவு செய்ய வேண்டும். இரண்டாவது அடுக்கில் எலுமிச்சை, கொய்யா, அரளி போன்ற நடுத்தர தாவரங்களை நடலாம். மூன்றாவது அடுக்கில் புற்கள் மற்றும் கொடிகள் அதாவது தர்பூசணி, கீரை வகைகள், புல் வகைகள் மற்றும் அவரை போன்ற கொடி வகைகளை நிலத்தடியில் வளர்க்கலாம்.
